பவளமலை, முத்துக்குமாரசாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், ஈரோடு மாவட்டம் பவளமலை என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். கோபியில் இருந்து பாரியூர் செல்லும் சாலையில் முருகன்புதூரில் மரங்கள் அடர்ந்த ஒரு அழகிய குன்று உச்சியில் உள்ளது.
மூலவர் : முத்துக்குமாரசாமி
அம்மன் : வள்ளி , தெய்வானை
தலச் சிறப்புகள் : முத்துக்குமாரசாமி அழகிய குன்றில் சுமார் 60படிகள் ஏறிச்சென்றால் திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்யலாம். பச்சை மலைக்கு இணையாக பவளமலையும் கோபிசெட்டிபாளையத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது. பச்சைமலை குமரக்கடவுளின் ஆலயமாக அமைந்திருக்கிறதோ, அப்படியே பவளமலையிலும் குமரக்கடவுள் குடிகொண்டிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இக்கோயிலில் முத்துக்குமாரசாமி சன்னதியும், வள்ளி தெவ்வானை, கைலாசநாதர், இடும்பன், வநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. திருக்கோவில் வளாகத்தில் கைலாசநாதர் சுயம்பாக தோன்றியது. கிரிவல பாதையில் வாகனங்களிலும் செல்லலாம். இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்சாவ முனிவரால் உருவாக்கப்பட்டது.
தல வரலாறு : ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. வாயுபகவான் தனது சக்தியை எல்லாம் திரட்டி மேரு மலையை தகர்த்துக்காட்டுகிறேன் என்று சவால் விட்டு மலையுடன் மோதுகிறார்.
காற்றின் வேகத்தை தாங்க முடியாக மேரு மலையின் சில பாகங்கள் மலையை விட்டு பறந்தன. அதில் ஒரு துளி விழுந்த இடம்தான் பவளமலை என்கிறது பவளமலையின் தல புராணம். மகேசனாகிய சிவபெருமான் இந்த கோவிலில் குடியிருந்து அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லாசி வழங்குகிறார். இந்த லிங்கமானது, அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உழவுப்பணி செய்யும்போது சுயம்புவாக தோன்றியது என்றும், அதையே எடுத்து வந்து மலைமீது வைத்து தொன்று தொட்டே வணங்கி வருவதாகவும் தல புராண கதை கூறுகிறது. பவளமலை கோவிலில் சிவபெருமானுக்கு ஈடாக முருகபெருமானை கொண்டு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும். திரி என்றால் மூன்று சதம் என்றால் நூறு திரிசதம் என்பது முந்நூறு. அதாவது முருக பெருமானுக்கு செய்யப்படும் புகழ்மிக்க அர்ச்சனை இது. ஆறுமுகக்கடவுள் என்று போற்றப்படும் முருகன், பன்னிரு கைகள், ஆறு முகத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று சிவபெருமானை போன்று ஐந்தொழில்களையும் மேற்கொள்பவராக இருக்கிறார். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கும் சேர்த்து 300 அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.
சூரபத்மனை வதம் செய்து இந்திரலோகத்து தேவர்களை எல்லாம் முருக கடவுள் மீட்டார். எனவே அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தேவர்களின் அரசன் இந்திரன் தலைமையில் தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை. எனவே எதிரிகளை வீழ்த்தும் திரிசத அர்ச்சனை என்றும் இது அழைக்கப்பட்டது. திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு கிடைக்க, தொழில், அரசியலில் எதிரிகளிடம் இருந்து வெற்றி பெற விரும்புபவர்கள் பவளமலையை தேடி வந்து திரிசத அர்ச்சனையை சிறப்பாக செய்வது வழக்கம். பவளமலை கோவில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கிறது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டு உள்ளது.
இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறுகிறது. பிரதி செவ்வாய்கிழமைகளில் காலை 6.00மணிக்கு திரிசதை அர்ச்சனை நடைபெறுகிறது. கிருத்திகை,சஷ்டி,காலங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்பத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஈரோடு , கோபிசெட்டிபாளையம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு