திருமலைக்கேணி, சுப்பிரமணியசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் திண்டுக்கலிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கரந்தமலை தொடரில் மலை உச்சியில் அழகிய வனந்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
மூலவர் : சுப்ரமணியர்
உற்சவர் : தண்டாயுதர்
தல தீர்த்தம் : வள்ளி தெய்வானை தீர்த்தம்
தலச் சிறப்புகள் : மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து, ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள். இந்த கோலத்தில் முருகனை தரிசித்தால், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கும் என்கிறார்கள். உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது.
இங்கு மயில்களும், வானரங்களும் அதிகமாக காணப்படுகிறது. இத்தலத்தில் வற்றாத நீர் சுனை உள்ளது இதன் பெயர் காரணமாகவே இத்தலம் 'திருமலைக்கேணி' என்று அழைக்கப்படுகிது.இத்திருக்கோயிலில் உள்ள நீர் ஒரு இடத்தில் வெந்நீராகவும், வேறு இடத்தில் சாதாரனமாகவும் மற்றுமொரு இடத்தில் மிக குளிர்ந்த நிலையிலும் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தர் பல காலங்களுக்கு முன்னர் இங்கு சீவசமாதி நிலை அடைந்துள்ளார் அவருக்கென தனிக்கோயில் உள்ளது.
தல வரலாறு : மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார், கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால், பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது. பிரகாரத்தில் சக்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. கோயில் வளாகத்திலுள்ள மாமரத்தின் அடியில் அருணகிரியார் காட்சியளிக்கிறார். குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இக்கோயிலை, "கீழ் பழநி' என்றும் அழைக்கிறார்கள்.
இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். அவ்வேளையில் அவரது கனவில் தோன்றிய முருகன் தீர்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி, மன்னர் இங்கு கோயில் எழுப்பினார்.
கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடக்கும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, தை கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொறுப்பான பதவி கிடைக்க, தலைமைப்பண்பு வளர இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தெய்வானை தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வேண்டிக்கொள்கின்றனர். சுப்பிரமணியரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும், விபூதி மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 2.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டுக்கல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு