காஞ்சிபுரம்





	


	



























	




 




	








 




2:50:36 PM         Sunday, April 19, 2026

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
Product Code: காஞ்சிபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  காஞ்சிபுரம்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை.

இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கியது.  பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறான். நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். 

காமாட்சியம்மன் கோயில்

சுவாமி : காமாட்சியம்மன்

தீர்த்தம் : பஞ்சகங்கை 

தலவிருட்சம் : செண்பகம்

சிறப்புகள்  : காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள்  கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம்  காலமாக இருந்து வருகிறது.  காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில்  அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக  திகழுகிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும்.  அம்மனுக்கு  முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது.  இத்தலத்தில் தான் ஆதிசங்கரர்  ஆனந்தலஹரி பாடினார்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் கயிலை மலையில், ஒளிமயமான தூய மணிமண்டபத்தில், முதன்மைப் பொருந்திய சிங்காதனத்தின் மீது, தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில்  இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார்.  தாருகன் அழிவுக்குப் பின்னர்  ஈசனும், தேவியும் கயிலை மலையில் தங்களுக்கு என அமைந்த ஏகாந்த மண்டபத்தில்  ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது தேவி விளையாட்டாக ஈசன் முதுகுப்புறம்  வந்து அவருடைய கண்களைத் தன் இரு கரங்களில் பொத்தினார்.  இதனால் உலகம் இருண்டது.   இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது. எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில்  நின்றது.  யாகங்கள் தடைப்பட்டன. தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன. தெய்வ வழிபாடு அறவே ஒழிந்தது. உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின.  அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது. மறை நூல்கள் மறைந்தன.  இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.

தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆபத்து  சூழ்ந்ததோ எனப் பதை பதைத்து சப்தமிட்டனர். இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது.  உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார்.  உடனே  இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.

சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி  அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது. அப்பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார். அதற்கு வழியையும் கூறினார். தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார்.  இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.

அன்னை இறைவனிடம் விடைபெற்று முதலில் காசி நகரத்தை அடைந்து, விஸ்வநாதரைப் பணிந்து வழிபட்டு, பின்பு தொண்டை நாட்டில் அமைந்துள்ள காஞ்சியை அடைந்த அன்னை, காஞ்சியில்  உள்ள சிவத்தலங்களை முறையாகத் தரிசித்துக் கொண்டு திருவேகம்பத்தை அடைந்தார். அங்கு  ஏகாம்பர நாதரைக் கண்களால்  கண்டனர்.  அதன் பிறகு அன்னை பிலாகாசத்தை அடைந்த 32 அறங்களைச் செய்து தவம் இயற்றி, பின்பு  இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.

கோயில் அமைப்பு : கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். இந்த கோவிலில் சரஸ்வதி, லக்ஷ்மி, அருபா லக்ஷ்மி,  சியாமளா, வராகி, அன்னபூரணி, அர்த்தநாரிஸ்வரர் ஐயப்பன், துர்வாச முனிவர் ஆகியோர் தனி தனி சன்னதியில் உள்ளனர். கருவறைக்குள் மூலவரின் சிலைக்கு அருகில் காமாட்சி அம்மன் ஒற்றை காலில் தவம் இருப்பது எங்கும் காண கிடைக்காத அதிசயம்.  இந்த  கோவிலில் உள்ள முதல் பிரகாரத்தில்    காயத்திரி மண்டபத்தின் நடுவில் தான் காமாட்சி அம்மன் உள்ளார். இந்த மண்டபத்தில் மொத்தம் இருபத்தி நான்கு மண்டபங்கள் உள்ளது.   இந்த மண்டபத்தின் தோற்றம் போன்று கீழும் இதே மண்டபம் உண்டு ஆதலால் காயத்திரி   மண்டபத்தில் இருந்து அம்மனை வணங்க மாட்டார்கள். அந்த மண்டபத்தில் இருந்து வணங்குவது அம்பாலின்  மீது நிற்பதற்கு சமம்.

விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்வர்  பெருமாள் சன்னதி  அம்பாளுக்கு அருகில் இருப்பது மிகவும் சிறந்த ஒன்றாகும். இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கருதபடுவது துண்டீர மகராஜா சன்னதி. இந்த தலத்தை  ஆட்சி செய்த துண்டீரர் என்ற ஆகாசபூபதிக்கு குழந்தை இல்லை. அவர் காமாட்சி அம்மனை தினமும் வழிபட்டு வந்தான். கணபதி துண்டீரர் என்ற பெயரோடு அந்த ஊரை ஆட்சி செய்தார்.  பிள்ளையார் துண்டீரர் என்ற பெயரில் ஆட்சி செய்ததால் அந்த ஊரிற்கு தொண்டை மண்டலம் என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது.   துண்டீர மகராஜா  காமாட்சி அம்மனுக்கு எதிரே  அமர்ந்துள்ளார். இவரை காண செல்லும் முன் அமைதியாக  செல்ல வேண்டும். 

உலக நாயகியான காமாட்சி அன்னை எழுந்து அருள் புரியும் மண்டபம் காயத்திரி மண்டபம் என அழைக்கப்படுகிறது.  அம்பிகை அச்சந்நிதியில் தென்கிழக்குத் திசை நோக்கி எழுந்தருளி உள்ளார்.  அமர்ந்த திருக்கோலத்தில், சுகாசனயோகத் திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலான படைக் கருவிகளைக் கரங்களில் கொண்டு  பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்து கொண்டுள்ளார். மாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா, ஐப்பசியில் அவதார உற்சவம், ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும். 

காலை 5.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.00 வரை திறந்திருக்கும்.

ஏகாம்பரநாதர் கோயில்

சுவாமி  : ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் 

அம்பாள் : ஏலவார்குழலி, காமாட்சியம்மை

தல மரம் : மா மரம் 

தீர்த்தம்  : கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம்

தேவாரப் பாடல் : சம்பந்தர், அப்பர்  

சிறப்புக்கள் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்.

இத்தலத்தின் ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.

இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.

கோயில் வரலாறு : பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.

இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.

தல வரலாறு : மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட  மணல் லிங்கம் ஆகும். இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம்.

காலை 5.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.00 வரை திறந்திருக்கும்.

வரதராஜபெருமாள் கோயில்

சுவாமி : வரதராஜ பெருமாள்

அம்பாள் : பெருந்தேவி தாயார்

தீர்த்தம் : வேகவதி ஆறு, அனந்தசரஸ்

சிறப்புகள்  : இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது.  காஞ்சியில்  தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும்.  மூலவர்  வரதராஜப்  பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து  கொண்டுள்ளார்.  பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு  அருள்புரிந்து கொண்டுள்ளார்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. கி.பி1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

கோயில் அமைப்பு : அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது. இம் மண்டபத்தின் தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

மலைமீது காட்சி தருவதால மூலவருக்கு மலையாளன் என்ற பெயரும் உண்டு. மேலும் அவர் வரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்ற பல திருப்பெயர்களைக் கொண்டுள்ளார். மேற்கே நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் உள்ளார். இரண்டாவது மாடியான மேல் மாடி வரதராஜப்பெருமாள் சன்னதியான அத்திகிரி என்றழைக்கப்படுகிறது. பெருந்தேவித் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது. இரண்டாவது திருச்சுற்றில் 24ஆவது படிக்கு எதிராக தங்கத்தினாலும், வெள்ளியாலும் ஆன இரண்டு பல்லிகள் உள்ளன. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றைத் தொட்டு, பெருமாளை வணங்கினால் நோயிலிருந்து விடுபடுவதாக நம்பிக்கை உள்ளது. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத அளவில் 16 கைகளுடன் உள்ளார். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அத்தி வரதர் : அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர். அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

தல வரலாறு : தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக்  பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில். ஒரு சமயம் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த  யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்தார் மகாவிஷ்ணு எனவே  அவருக்கு வரதர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.  யாகத்தில் அளித்த அவர்ப் பாகத்தை ஒரு  சித்திரை மாத திரிவோண நன்நாளில் நாராயணன் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கர,  கதையுடன் தோன்றி ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மந் நாராயணன் புண்ணியக்கோடி விமானத்துடன்  இங்கு எழுந்தருளிய நன்நாள் சித்திரை  மாதத்து திருவோண தின்த்திலாகும்.  அந்நாளில் தேவர்கள்  ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய  வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாராயணன்  சம்மதித்தார்.  உடன் ஐராவதம்  என்ற யானையே மலை வடிவில் கொண்டு நாராயணனைத் தாங்கி  நின்றது. இதனால் இதற்கு  அத்திகிரி என்று மற்றொரு பெயரும் ஏற்பட்டது.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு  மகன்கள் இருந்தனர்.  இவர்கள் கெளதம் முனிவரிடம் வித்தைப் பயின்றனர்.  இவர்கள் இருவரும்  விஷ்ணு பூஜைக்குப் பழம் புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.  ஒரு  நாள் கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்து விட்டது.  இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கெளதம முனிவரிடம் கொடுக்க,  முனிவர் அதை பெற்றுக் கொண்ட போது அதில் இருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.

அதைக்  கண்டு கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது  என்று சாபம் அளித்தார். இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின்  பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி அறியாமையால் தவறு நடந்து விட்டது எங்களை  மன்னித்து, பாபவிமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர்.  உடனே முனிவர் சாந்தம் அடைந்து இந்திரன் யானை வடிவம் கொண்டு  வரதனை தரிச்சிக்க இச்சந்நிதியில்  நுழைவான் அச்சமயம் உங்கள் சாபம் அகலும் என்று கூறினார்.

அதன் பின்பு ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்தலதிற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர்.  குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், யானை வடிவம் கொண்டு இத்தலத்தில் நுழைந்த  உடன் இவர்களின் சாபம் அகன்றது என்பது, பல்லியின் புராண வரலாற்றுச் சான்றோர்கள்  கூறுகின்றனர்.

திருக்கோயிலினுள் அழகிய சிங்கர் சந்நிதி, சக்கரதாழ்வார் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி, வலம்புரி விநாயகர் சந்நிதி, திருவனந்தாழ்வார் சந்நதி, கருமாணிக்க வரதர் சந்நதி, மலையாள நாச்சியார் ஆகிய சந்நிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.

காலை 7.30 மணி முதல் 12.30 வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி  வரை திறந்திருக்கும்.

கைலாசநாதர் கோயில்

சுவாமி : கைலாசநாதர்

அம்பாள் :  காமாட்சி அம்மன்

சிறப்புகள்  : தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.மூலவர் லிங்கத்திற்குப் பின்புறச் சுவரில், எம்பிரான், ஏலவார் குழலியோடும், பாலன் குமாரனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அத்தனை கோயில்களிலும் இது போன்ற அமைப்பினை நாம் காண்கிறோம். நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட லிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி. கருவறையையும் முகமண்டபத்தையும் சுற்றியுள்ள திருச்சுற்றிலும், வெளிச் சுவர்களிலும், பிட்சாடனர், கங்காதரர், திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், துர்க்கை, திருமால் போன்ற சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவதாண்டவ காட்சிகளையும் காணமுடிகிறது.

தல வரலாறு : கைலாசநாதர் கோயில் தான் இந்நகரில் உள்ள மிகப் புராதனமான கோயிலாகும். இது, சிவ பெருமானுக்காக, பல்லவ மன்னரான நரசிம்மப்பல்லவரால், எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயிலாகும். சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒளியில்லா ஒரு சிறு சந்நிதியின் நேர் மேலே அமையப்பெற்றுள்ள விமானம் ஆகியவற்றுக்காக பெரிதும் பேசப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மரச்சட்ட்ங்கள் பலவற்றில், சிவபெருமான், நடராஜர் தோற்றத்தில் காணப்படுகிறார்.

பல்லவர் காலத்து கோயில்களில் மட்டுமே நாம் காணும் சப்த மாதர், அஷ்டதிக் பாலகர்கள், ஏகாதச ருத்திரர்கள், கருட நரசிம்ம யுத்தம், பைரவி, இப்படி எண்ணற்ற மூர்த்தங்கள் வேறு எங்கும் நாம் காண முடியாதவை. இக்கோவிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.

கோயில் அமைப்பு : இந்தக் கோயிலை நிர்மாணித்தவன் ராஜசிம்மன். அதனைச் சுட்டிக்காட்டும்படி, எங்கு பார்த்தாலும் சிம்மங்களே கோயிலைத் தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலிலே நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் ஒரு கதையைக் கூறுவதாக உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்று. சிவபெருமானின் தோற்றங்களை, அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன, இங்குள்ள சிற்பங்கள். ஒருபுறம் சம்கார மூர்த்தங்களாகவும் மறுபுறம் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளதும், இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையையும், ஆன்மிக அறிவாற்றலையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. 

தொடக்கத்தில் இக் கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம் ஆகும்.

இறைவனது கருவறை மீதுள்ள விமானம் இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இவ்விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது.

பிரதான ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. அவை தக்ஶிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், ஹரிகரர் முதலிய திருவுருவங்கள் ஆகும். உமையன்னை, முருகப்பிரான், திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத்திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக் காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும் கலைச் சிறப்பும் மிக்கவையாகும். கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய சிற்பங்களாகப் பல்லவ சிற்பிகளின் உளிகள் வடித்துள்ளதைக் காணலாம்.

கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம், அரக்கோணம் 

பேருந்து வசதி  : உண்டு 

உணவு வசதி & தங்கும் வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×