திருஇரும்பூளை (ஆலங்குடி)
திருத்தலஅமைவிடம் :ஆலங்குடி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருஇரும்பூளை தற்போது ஆலங்குடி என்ற பெயரில் அறியப்படுகிறது.
இறைவன் : ஆபத்சகாயேஸ்வர்
இறைவி : ஏலவார் குழலியம்மை
தல விருட்சம் : பூளைச்செடி
தீர்த்தம் : ஞானக் கூட தீர்த்தம், சக்ர தீர்த்தம், அமிர்தபுஷ்கரிணி
திருப்பதிகம் பாடியவர் : திருஞானசம்பந்தர்
சிறப்புகள்:இத்தலத்தில் உள்ள மூலவர் சுயம்பு மூலவராவார். இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர்.கருநிறமுள்ள பூளைச் செடியைத் தல விருட்சமாகக்கொண்டுள்ளதால் “திருஇரும்பூளை” என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும், திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும்“ஆலங்குடி” என்று பெயர்.
இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்திதான் பிரபலமானவர். குருவே தட்சினாமூர்த்தியாகவும், தட்சினாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது.ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு சந்தான பாக்கியம் பெற்றாள். ஆலங்குடி தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ் பாடிய மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவி சமேதராய் வரதராஜப் பெருமாளாக இங்கு கோவில் கொண்டார். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.
தல வரலாறு: முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான்.ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.
ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். குரு பகவானின் அருளாசி கிடைக்க ஆலங்குடி சென்று அவரை 24 தீபங்கள் ஏற்றி அர்ச்சித்து 24 முறை வலம் வர வேண்டும். வியாழக் கிழமைகள் தோறும் விரதம் இருப்பதாலும், தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்வதாலும் குரு பார்வை கிடைக்கும்.
கோயில் அமைப்பு: பழங்கால சிற்பங்கள் கொண்ட ஐந்து நிலை கோபுரத்துடன் விளங்குகிறது இத் திருத்தலம். உட் பிரகாரத்தில், சனீஸ்வரன், சுக்ரவார அம்மன், சூரியன், சுந்தர மூர்த்தி, சமயக் குரவர் நாலவர், சப்த லிங்கங்கள், சோமச் கந்தர், அகத்தியர், முருகன், லஷ்மி சந்நதிகளும் உள்ளன. ஆலயத்தின் தெற்கு பக்க ராஜ கோபுரத்தில் கலையம்சம் கொண்ட சிற்பங்கள் உள்ளன. இது குரு தலம் என்றாலும், சிவனே இங்கு தட்சிணாமூர்த்தியாய் அருள்பாலிகிறார்.
பிற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்கள் சிவ பெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கும் ஆனால் இங்கு சிவனே தட்சிணாமூர்த்தியாய் அருளுகிறார்.
பார்வதி தேவி, விஷ்ணு, லட்சுமி, இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்ட தலம் இது. இங்கு ஆதி சங்கரர், சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் சிவஞானம் அடைந்தனர். ஒரு சமயம், கஜமுகன் என்கின்ற அரக்கன் ஒருவன் தேவர்களை இம்சிக்க, இறைவனின் ஆணைப்படி
இத் தல விநாயகர் அரக்கனை தண்டித்து தேவர்களை காத்தருளினார். இதனாலெயே இவர் " கலங்காமல் காத்த விநாயகர் " ஆனார்.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 1.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 102 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம் 17 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு