திருக்காளத்தி, காளத்தியப்பர் (கேது)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி கேது தலம் உள்ளது. சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில், திருப்பதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய முக்கிய நகரங்கலிலிருந்து இத்திருத்தலத்திற்கு பேருந்து செல்கின்றன.
சுவாமி : காளத்தி நாதர், குடுமித் தேவர்
அம்பிகை : ஞானப் பூங்கோதை, ஞானப் பிரகன்னாம்பிகை
தலமரம் : வில்வ மரம், கல்லால மரம்
தீர்த்தம் : பொன்முகலி ஆறு
தல சிறப்புகள் : நக்கீரதேவ நாயனார் கயிலை பாதி, காளத்தி பாதி என்று பாடியுள்ள சிறப்புப் பெற்ற தலம். இத்திருத்தலத்தில் சுவர்ணமுகி எனப்பெறும் பொன்முகலி ஆறு செல்கிறது. இது வடக்கு நோக்கிச் செல்வதால், உத்தரவாகினி என்னும் சிறப்புடையது. இத்தலத்திற்குத் 'தக்ஷிண கைலாசம்' என்று ஒரு பெயரும் உண்டு. தட்சிணா (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இறைவன் சந்நிதியில் எரியும் திருவிளக்குகளில் ஒன்று எப்போதும் காற்றால் மோதப்பட்டது போல் அசைந்து கொண்டே இருக்கின்றது. இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சீ-சிலந்தி: காளம் - பாம்பு, அத்தி - யானை: இம்மூன்றும் வழபட்டதால் 'சீகாளத்தி' என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் வடக்கில் துர்க்கை மலையும் தெற்கில் கண்ணப்பர் மலையும் கிழக்கில் குமரக்கடவுள் மலையும் அமைந்துள்ளது. 'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ' எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம். அருச்சுணன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
மூலவர், சுயம்பு தீண்டாத் திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது தங்கக் கவசம் பட்டைகளாகத் தெரிவது சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது. கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர். மூலவருக்கு கங்கைநீரை தவிர வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே.
அம்பாள் ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம். திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு : ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் காளிகோபுரம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1516-ல் கட்டப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவரும் இவரே. கோயிலின் பிரதான வாயிலில் உள்ள இக்கோபுரமும் , ஏனைய கோபுரங்களும் 12-ம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும். இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் சந்நிதி விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். 2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது. கவனித்தால்தான் தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால், 'இரண்டு கால் மண்டபம் ' பார்த்தாயா என்று கேட்கும் வழக்கம் உள்ளது. இரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும். பிரதான கோபுரம் 'தக்ஷிண கோபுரம் ' எனப்படுகிறது; 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம். கிருஷ்ணதேவராயர், அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாக பல சிவலிங்கங்களும், ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது. திருகாளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. இது சசிகுல சாளுக்கிய வீரநரசிங்கத்தேவன் திருக்காளத்தி தேவனான யாதவராயரால் கட்டப்பட்டது. இதுவன்றி தியாகமேகன் மடம் ஒன்று இருந்ததாம்.
கண்ணப்பர் கோயில் இக்கோயில் மண்டபமும் சுற்றிய தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பட்டது. சோழ, விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன; இறைவன் 'தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார் ' என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு 'காளத்தி உடையான் மரக்கால் ' என்ற அளவு கருவி இருந்ததாக குறிப்பிடுகிறது.
சிவபெருமானிடம் பேரன்பு பூண்ட 63 நாயன்மார்களுள் கண்ணப்ப நாயனாரும் ஒருவர். கண்ணப்ப நாயனார் இப்பெருமானை வணங்கி ஆறு தினங்களில் முக்திப் பேறு பெற்றார். சிவலிங்கத் திருமேனியின் கண்ணில் இரத்தம் கசிவதைப் பொறுக்காது கண்ணப்ப நாயனார் தன் கண்ணை அம்பால் இடந்து அப்பிய தலம். சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இது ராகு, கேது ஸ்தலமாகும். தோஷ நிவர்த்தி செய்யப்படும் சிறப்புத் தலமாக உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்ட பாதாள விநாயகர் சந்நிதி தனியாக உள்ளது. 35 அடி ஆழத்தில் 20 படிகள் இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும். நவக்கிரகங்கள் சுவாமிக்குக் கவசம் ஆகும் நிலையில் ஒன்பது பகுதிகளுடன் கூடிய ஏணி ரூபத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். ஓவ்வொரு படியிலும் மூன்று நக்ஷத்திரங்களாக 27 நக்ஷத்திரங்களும் மூல விக்ரஹத்தில் அடங்கியிருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். சுவாமியின் நாக ரூபம் ராகுவாகவும், அசையும் தீபம் கேதுவாகவும் கருதப்படுகிறது. காளஹஸ்தி க்ஷேத்திரம் ஓர் நவக்கிரஹ தோஷ நிவர்த்தி தரும் நவக்கிரக் கோவில்.
வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார்.
தல வரலாறு : இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.
பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தார். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து பாடிப் பரவிய சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார். ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். திருவல்லம் தொழுது இங்கு வந்த சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.
இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான் மட்டும் உள்ளார். பொங்கல் விழாவில் ஒரு நாளிலும், பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்; அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலைத் தொடங்கி மறுநாள் முடிவுறுமாம்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரேணி குண்டா, திருப்பதி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு