திக்குறிச்சி மகாதேவர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்திலிருந்து சுமார் 5 கி.மீ வடகிழக்கில் உள்ள இத்தலம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தாமிரபரணி திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் நதி. இதன் கிளை நதியொன்று கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நதிக்கரையில் தான் திக்குறிச்சி அமைந்துள்ளது. சிதறால் என்று இப்போது வழங்கும் திருச்சாரணத்து மலையிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : திக்குறிச்சி மகாதேவர்
சிவாலய ஓட்டம் : மகா சிவராத்திரி தினத்தன்று கன்யாகுமரி மாவட்டத்தில், பன்னிரண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது.
தல வரலாறு : இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால் அவரைத் தாக்கிவிடும்.
தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் சிவனும் அரியும் ஒன்று என்பதை உணர்த்த வேண்டும் என்பது ஸ்ரீகிருஷ்ணரது விருப்பம். தர்மர் ஒரு முறை ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். எனவே, யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனைப் பணித்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், வைணவத்தை வெறுக்கும் அந்த புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி எனத் தயங்கினான். இதுவே தக்க தருணம் என நினைத்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்க ஆரம்பித்து விடும். அப்போது நீ எளிதில் தப்பித்து விடலாம்’’ என்று கூறினார்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் ஒரு பாறைமீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று உரத்துக் கூறினான். இதனால் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே, பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று குரல் எழுப்பினான். புருஷா மிருகம் பீமனைத் துரத்த ஆரம்பித்தது. பீமன் மீண்டும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது இடத்தில் திருநட்டாலம் ருத்திராட்சத்தைப் போடும்போது புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான் புருஷாமிருகத்திடம்.
அப்போது அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். அவர் பாரபட்சம் கருதாமல், ‘‘ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால் பாதி உடல் புருஷாமிருகத்துக்கே’’ என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கண்டு மகிழ்ந்தது புருஷாமிருகம். அந்த நேரத்தில் ஒளிப் பிழம்புடன் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜசூய யாகம் நடக்க உதவியது புருஷாமிருகம்.
புருஷாமிருகத்திடம் இருந்து தப்பிக்க பீமன் ருத்திராட்சங்களைக் கீழே போட அவை அனைத்துமே சிவலிங்கங்களாக மாறி, ஆலயங்கள் எழும்பின என்பார்கள்.
சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக்கேட்டான். சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.
இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ் வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும்.
மகா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பர். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா கோபாலா’ என்று கோஷமிட்டவாறு திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். அந்த தொடர் ஓட்டத்தில் பன்னிரு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். பன்னிரண்டாவது ஆலயமான திருநட்டாலத்தில் சந்தனமும் மற்ற ஆலயங்களில் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.
சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.
பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.
இது சைவ வைனவ ஒற்றுமக்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா. இந்த விழாவின்போது பக்த்தர்கள் மொத்தம் 12 சிவன் கோவில்களை வரிசையாக ஓடி சென்று தரிசிப்பது வழக்கம். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இந்த ஓட்டம் துவங்குகிறது. வழியெல்லாம் கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டபடி ஓடிவரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும்,மோர்,குடிநீர் அன்னதானம் என வழங்கியபடி இருப்பர். முன்சிறையில் துவங்கும் ஓட்டம் அங்கிருந்து திக்குறிசி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை திம்பிலார்குடி மகாதேவர் கோவில், திருபன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர், மேலங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், கோழிப்போர்விளை பள்ளியாடி திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் வழிபாடு செய்து 12 வதாக நட்டாலம் சங்கர நயினார் கோவிலுக்கு வந்து தங்கள் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.
திக்குறிச்சி: இங்கு மகாதேவர், விநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகராஜா ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசித்த பின், இங்கிருந்து அருமனை களியல் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ள திற்பரப்பு எனும் பிரபலமான அருவி கொண்ட திருத்தலத்தை அடையலாம்.
பாசுபதம் வேண்டி அர்ச்சுனன் தவமிருக்க அதை தடுக்க துரியோதனன் முகாசூரன் என்ற அரக்கனை அனுப்ப, பன்றி ரூபம் கொண்டு அர்ஜுனனைத் தாக்கவர, அர்ஜுனனைக் காக்க சிவபெருமான் வேடனாக உருவெடுத்து வந்து பன்றியின் மேல் அம்பு எய்ய அதே சமயம் அர்ஜுனனும் அம்பு எய்த பன்றி கீழே விழ அது யாருடைய வீரம் என இருவருக்கும் கருத்து மோதல் வந்து ஒருவரை ஒருவர் கட்டிப் புரண்டனர். தான் பலமிழந்து கீழே விழுந்ததும் அருகில் இருந்த பூக்களை அங்கிருந்த இறைவன் மேல் போட்டு தனக்கு பலம் பெருக வழிபட அப்பூக்கள் வேடன் தலையில் இருப்பது கண்டு வந்திருப்பது ஈசனே என்றுணர்ந்து மன்னிக்க வேண்டினான், ஈசன் மகிழ்ந்து அருள் புரிந்து ஆசி வழங்கி பாசுபதத்தை வழங்கினார். அப்போது ஈசன் மிகவும் உக்ரமாக இருந்ததால் அருகில் அமர்ந்து தியானம் செய்ய தாமிரபரணி அங்கு அவரைத் தொட்டுக் கொண்டு ஓடி அவரை குளிர்ச்சியடையச் செய்தது. இப்பொழுதுள்ள மகாதேவர் ஆலயம் பிற்காலத்தில் கட்டப்பட்டது.
திருத்தல அமைப்பு :
ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் கோவில் கிழக்கு பார்த்தது. ஆனால் மக்கள் வடக்கு வாசலையே பயன்படுத்துகிறார்கள். நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் எடுக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் ஒரு கதை வழங்குகிறது. இக்கோவிலில் நந்தி இல்லை. இக்கோவிலில் மார்கழி, சதய நட்சத்திரத்தில் கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் விழா நடக்கிறது. கோவிலில் நிலையான கொடிமரம் இல்லை. திருவிழா காலங்களில் கமுகுமரத்தை வெட்டி கொடிமரமாக நடுகின்றனர். ஸ்ரீசப்தகணபதி, ஸ்ரீஇசக்கியம்மன், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீஷேத்ரபாலர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீயோக கந்தர்வயஷராக்ஷா, ஸ்ரீவீரராகவன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
பன்னிரு சிவாலயங்களில் இரண்டாவது கோயிலாகும். பழமைவாய்ந்த இத்தலம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் ஆறும், மற்றப் பக்கங்களில் எழில் மிகு சோலைகளும் அமைந்து அமைதியான ஒரு சூழ்நிலையில் கோயில் உள்ளது. கோயில் கிழக்குத்திசை நோக்கி உள்ளது. கோயிலின் எதிரில் அரசமரமும், நாகமரமும் உள்ளது. கோயிலின் முன்புறம் கொடிமரம் உள்ளது ஆனால் தற்போது அம்மரம் ஒடிந்துவிட்டது. பெரிய நந்தி ஒன்று இங்கு இருப்பதாகவும், இப்போது அந்த நந்தி விக்கிரகம் ஆற்றினுள் கிடப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். நந்திக்குறிய ஒரு வழிபாட்டினை ஒரு கிணற்றில் செய்கின்றனர். மலைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கோயில் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்போது படகில் தான் செல்ல வேண்டும். கோயிலின் வடக்குபுற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். ஏனெனில் கிழக்குதிசை பார்த்து கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் ஆறு உள்ளது. கோயிலின் பின்புறம் ஏராளமான செம்பருத்தி செடிகள் காணப்படுகின்றன. சிவராத்திரியை ஒட்டி எவ்வளவு இலை பறித்தாலும் மீண்டும் துளிர்த்து வளர்ந்து விடுவதாகத் தெரிகிறது. இங்கு மூன்று கால பூஜை நடைபெறுகிறது மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது இங்கு விநாயகர், சாஸ்தா, நாகராஜர் போன்ற உபதேவதைகளின் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயில் முன் பின் பகுதிகளில் அரசமரம் உள்ளது. ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசிக்கலாம்.
கோயில் காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : குழித்துறை
பேருந்து வசதி : உண்டு
உணவு வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்ல