கற்பக விநாயகர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குன்றக்குடிச்சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.
மூலவர் : கற்பக விநாயகர்
ஈசன் பெயர் : திருவீசர்
அம்பாள் பெயர்: சிவகாமி அம்மை.
தல விருட்சம்: மருதமர்ம்
தீர்த்தம் : ஊருணி
புராணப் பெயர்: மருதம்பூர்
தலச் சிறப்புகள் :. இக்கோயிலில் உள்ள வலம்சுழி விநாயகர் மிகவும் விஷேசமானவர். மூலவர் குடவரைக்குள் 6 அடி உயரம் கொண்டு, இரண்டு கைகளுடன் காட்சி அளிக்கிறார். விநாயகரின் வலது கையில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது. இவர் வடக்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், அவர் அர்த்தபத்மாசனத்தில் அமந்திருப்பதும், இடது கரத்தை கடி ஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்புத் தோற்றமாகும்.
தல வரலாறு: குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில்.
எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது.
கோவில் அமைப்பு: கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில்.
குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.
இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.
மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.
வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.
விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.
தரிசன நேரம் : கோவில் தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரைக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு