ஐராவதேஸ்வரர் கோயில் – மருத்துவக்குடி (இடைக்குளம்)
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறைக்குத்தெற்கில் 2 கிமீ தொலைவில் அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம் உள்ளது.இங்கே அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மூர்த்தம் : விருச்சிக விநாயகர்
இறைவன் (மூலவர் ) : ஐராவதேஸ்வரர்.
இறைவி : அபிராமி
தீர்த்தங்கள், தல விருட்சம் :
சந்திர- அரசமரம் , அக்னி - வில்வ மரம் யம- ஆலமரம், பிரம்ம- புன்னை மரம், கட்சயப - வில்வமரம் கௌதம- நெல்லிமரம், சேஷ தீர்த்தம்
இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில்,பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.
தல வரலாறு : இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் தல புராணம் தெரிவிக்கிறது. இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து.
இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.
கோவில் அமைப்பு : கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவரையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் ஆகியவை சோழர்களின் சைவப்பற்றுடையவன் இரண்டாம் இராஜராஜன் என்பதைக் காட்டும். மாபெரும் புராணப் பெருமைமிக்க இக்கோயிலின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து விளங்குகிறது. கோயிலுக்கு இடப்புறம் அம்பாள் அபிராமி எனும் திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருளை அமுதமாய் பொழிகிறாள். நாரதர், ‘திருக்கடையூர் அபிராமியும், இவளும் ஒன்றே’ என இணையாக அரியாசனத்தில் அமர்த்தி வழிபடுகிறார்.
கோயிலின் கோஷ்டங்களில் உள்ள மூர்த்திகள், அன்றலந்த மலராக பொலிந்து காணப் படுகிறார்கள். அற்புதமான தட்சிணாமூர்த்தி சிலை. வலம் வரும்போது தலவிருட்சமான வில்வ மரத்தைக் காணலாம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கை சிற்பம் பார்க்க உடல் சிலிர்க்கும். மகிஷனும், கொம்புகளும் புடைப்பாய் வெளியே துருத்தியிருக்க அதன் மேல் எண்கரங்களோடு நிற்கும் துர்க்கையின் சிற்ப நுணுக்கம் வியக்கத்தக்கது. பிராகாரத்தை வலம் வந்து கொடிமரம் அருகே நமஸ்கரித்து நிமிர நமக்குள்ளும் யானை பலம் வந்துவிட்டிருப்பதை உணரலாம்.
தலப்பெருமை: ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர். சந்திரன் இத்தலத்திற்கு வந்து சாபவிமோசனம் பெற்றதால் இத்தல தீர்த்தம் சந்திர தீர்த்தம் என்று பெயர் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டு ருக்மிணி தேவியை அடைந்ததும், ஸ்ரீ ஆதிஷேசன் வழிபட்டு பூமிதேவியைத் தாங்கும் வலிமையையும் பெற்ற தலம்.
சிறப்புகள்: ஒட்டியாணபீடேஸ்வரி. வெள்ளையாணை பூஜை-லிங்கம் வெண்மை. சந்திரன் விருச்சக பிள்ளையாரை நிறுவி வழிபாடு. நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு காதிலுள்ள தாடங்கம் எனும் ஆபரணம் அணிந்து ‘தாடங்க பீடேஸ்வரி’ என்று சக்தியோடு விளங்குவதுபோல், இத்தல அபிராமி, ஒட்டியாண ஆபரணம் ஏற்று ‘ஒட்டியாண பீடேஸ்வரி’ என்று மகாசக்தியோடு திகழ்கிறாள். மூலவர் சந்நதியில், ஐராவதத்தால் பூஜிக்கப்பட்ட ஐராவதேஸ்வரர் அருளை வெள்ளமாய் நிறைத்து, அருகே வருவோரை ஆனந்தத்தில் மூழ்கடிக்கிறார். வெண் யானை பூஜித்ததால் லிங்கத் திருமேனி இன்னும் வெண்மையாகவே உள்ளது. பக்தர்களின் மனோரதங்களை கேட்காமலேயே நிறைவேற்றும் மகத்தான சந்நதி அது.
மருத்துவக்குடியின் மகிமை சொல்லும் இன்னொரு விஷயம், இங்குள்ள விருச்சிகப் பிள்ளையார். சந்திரன் சுய ஒளியை இழந்து மங்கித் தேய்ந்து வந்தபோது, இத்தல ஈசனை வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கினான். மேலும், அவன் தன் சுய ஒளியை இழந்ததால் மூலநாயகனான பிள்ளையாரை நிறுவி பூஜித்தான். விநாயகரின் முகத்தையும், தேள் போன்ற வரிவரியான உடலமைப்பையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். ஜோதிட ரீதியாகவும் சந்திரன் நீசமானது விருச்சிக ராசியில்தான்.
ஆகவே, விருச்சிகத்தில் மங்கித் தேய்ந்தவன், இங்கு விருச்சிகப் பிள்ளையாரை நிறுவி பூஜித்திருக்கிறான். அதாவது, ஜோதிடம் சொல்லும் விஷயமும், புராண நிகழ்வும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போய், அந்த ஒற்றுமைக்கு ஓர் ஆதாரமாக இங்கு விருச்சிகப் பிள்ளையார் வீற்றிருப்பது பிரமிப்பூட்டுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வணங்க, அவர்கள் வாழ்வு விண்ணுயரும் என்பது உறுதி.
தரிசன நேரம் : கோவில் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஆடுதுறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு