மாகறலீஸ்வரர் கோவில், திருமாகறல்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திலிருந்து ஓரிக்கை, உத்திரமேரூர் செல்லும் சாலையில் தெற்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்ப் பெயரே சுவாமியின் திருப்பெயராகவும் விளங்குகிறது..
சுவாமி : திருமாகறலீசுவரர் உடும்பீசர் புற்றிடங் கொண்டார், அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர்
பாரத்திழும்பர், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், அகத்தீசுவரர் , பரிந்து காத்தவர்,
தடுத்தாட் கொண்டவர்.
அம்பிகை : புவன நாயகி, திரிபுவன நாயகி
தலமரம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், செய்யாறு
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாக விளங்குகிறது.
மூலவர் மாகறலீஸ்வரர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்மன் திருபுவனநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். வடக்குப் பிராகாரத்தில் தலமரம் எலுமிச்சை உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி, விநாயகரையும், மறுபுறம் சுப்பிரமணியரையும் வணங்கியவாறே, துவாரபாலகர்களைக் கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். இறைவன் மாகறலீஸ்வரர் எங்கும் காண இயலாத உருவில் உடும்பின் வால் போன்று விளங்கக் காணலாம். இராஜேந்திர சோழ மன்னருக்கு பென்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார்.
இத்தலம் மாகறன், மலையன் என்னும் அசுரர்கள் வழிபட்டது. காசிப முனிவர், அகத்திய முனிவர், இராஜேந்திர சோழன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றது. பிரம்மன், இந்திரன், சந்திரன், தாரை, ரதி மற்றும் தேவர்கள் வழிபட்டு வரம் பெற்றனர். தலதீர்த்தங்கள் 1. அக்னி தீர்த்தம் 2. செய்யாறு. அக்னி தீர்த்தம் கோயிலுக்கு அக்னிமூலையில் இருக்கின்றது. இத்தீர்த்தத்தில் நீராடி அகஸ்தீசுவரர் முனிவரை வழிபட்டால் எமலோக பயம் நீங்கி சிவலோகம் அடையலாம் என்னும் சுலேகம் வடமொழியில் கருத்துபட அமைந்துள்ளது என்பர். செய்யாறு இத்தலத்திற்கு தெற்கில் ஓடுகிறது. இத்தலத்தில் சோமவார தரிசனம் விஷேசமாகும். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இக்கோயிலை உடலால் வலம்வந்தால் பிள்ளைப் பேறு அடைவர் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இராஜேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி அருளினார். அம்மன்னன் துரத்தினான். இறைவன் ஓடி இங்குள்ள புற்றினிடமாக ஒளித்து வெளிப்பட்டருளினான். அதனால் சிவலிங்கத்தில் உடும்பு தழுவிக் கொண்டிருக்கின்ற தோற்றம் இருக்கிறது. இத்திருவூரில் திங்கட்கிழமை காட்சி சிறப்பாகும். மக்கட்பேறு வேண்டுபவர் இந்நாளிலும் அங்க பிரதட்சணம் செய்து வழிபடுகின்றனர். இறைவன் திருவருளால் மக்கட்பேறு அடைகின்றனர்.
புராண வரலாறு: மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். அதன்பின் சத்தியலோகம் திரும்பிச் செல்லுமுன் இத்தல எல்லையில் தினம் ஒரு பழம் தரும் அதிசய பலாமரத்தை உண்டாக்கிச் சென்றார். இம்மரத்தின் சுவைமிக்க பலாப்பழத்தைப் பற்றி கேள்விப்பட்ட இராஜேந்திர சோழ மன்னன், இப்பழத்தை தினந்தோறும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்து, அதன்பின் தனக்கு கொண்டுவந்து கொடுக்க வேண்டும் ஊர் மக்களுக்குத் தெரிவித்தான். ஊர் மக்களும் அவ்வாறே செய்து வந்தனர். ஆனாலும் ஊர் மக்கள் தினந்தோறும் சிதம்பரம் சென்று அதன்பின சோழ மன்னனின் தலைநகர் சென்று அரசனுக்கு பழத்தை அளித்துவிட்டு திரும்ப சிரமப்படுவதைக் கண்ட ஒரு அந்தணன் மகன் பலாமரத்தை வெட்டிவிட்டான். பழம் வருவது நின்று போனதைக் கண்ட மன்னன் அதைப் பற்றி விசாரித்து மரம் வெட்டப்பட்டதை அறிந்தான். பலாமரத்தை வெட்டியவனை நாடு கடத்தும் படி உத்தரவிட்டான். இரவு முழுவதும் பயணம் செய்து எவ்வளவு தொலைவில் விடமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று விட்டுவிடும் படி காவலருக்குச் சொல்லி அரசன் தானும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான்.
மன்னன் ஊர் திரும்பும்போது இத்தல எல்லையில் புதர் மண்டிய ஓரிடத்தில் பென்னிற உடும்பு ஒன்று அரசனின் கண்களுக்குத் தென்பட்டது. அதனைப் பிடிக்க முயலும் போது அவ்வுடும்பு ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். ஆட்கள் ஆயதங்களால் புற்றை அகழ்ந்த போது உடும்பின் வாலில் ஆயுதம் பட்டு இரத்தம் பீறிட்டுவர அதைக் கண்ட மன்னன் மயங்கிக் கீழே விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த அரசனுக்கு தான் அவ்விடம் இருப்பதை உணர்த்தி அங்கு சிவாலயம் எடுக்குமாறு அசரீரியாக கட்டளையிட்டு அரசனுக்கு அருளினார். இராஜேந்திர சோழ மன்னனும் அவ்வாறே இறைவன் பணித்தபடி திருமாகறல் தலத்தில் இறைவனுக்கு பெரிய சிவாலயம் ஒன்றைக் கட்டி நாள்தோறும் வழிபாடுகள் செய்வித்து இறையருள் பெற்றான்.
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை