வில்வ நாதேஸ்வரர் கோவில், திருவல்லம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் இராணிப்பேட்டையிலிருந்து காட்பாடி செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது திருவலம் என வழங்கப்படுகிறது. சென்னை காட்பாடி ரயில் பாதையில் திருவலம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது காட்பாடிக்குக் கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயில் திருவலத்தில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலத்தினை அடுத்து உள்ளது. சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : வல்லநாதர் வில்வநாதேசுவரர்
அம்பிகை : வல்லாம்பிகை தனுமத்யாம்பாள்
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : கெளரி தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள் : இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கும், சுவாமிக்கும் இடையில் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜன்ம சாபங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம்.
தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப் பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இத்தலத்தில் சிறப்பு. அம்பிகை சந்நிதி முன் பலிபீடம், சிம்மம் உள்ளது.
திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். தீக்காலி என்பவன் பூசித்து வழிபட்டமையால் தீக்காலி வல்லம் என்ற பெயரும் உண்டு. நவக்கிரகங்களும் வல்லாளன் என்னும் மன்னனும் பூசித்து பேறுபெற்றனர். இத்தலம் நிவா என்னும் ஆற்றின் மேல்கரையில் இருக்கின்றது.
இங்கு விநாயகர் முருகர் சகஸ்ரலிங்கம் மீனாட்சி சுந்தரேசர் பைரவர் சூரியன் பாதாள ஈசுவரர் காசி விசுவநாதர் சந்திர மௌலீசுவரர் அருணாசலேசுவரர் அம்பிகேசுவரர் வில்வநாதேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இங்கு அம்பாள் தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். நந்தி கிழக்கு நோக்கியுள்ளது.
இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலமுபுறம் நீராழி மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது. உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளும், சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது.
வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது.
மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே கிழக்கு நோக்கி சதுர பீடஆவுடையார் மீது மூலவர் வில்வ நாதேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாக்க் காட்சி தருகிறார். உள்சுற்று வலம் வரும்போது மூலையில் "பிராமி" உருவச்சிலையுள்ளது. மூலவர் சந்ந்ததிக்குள் நுழைய தெற்கு நோக்கிய பக்கவாயிலும் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது. கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேஸ்வரர் சந்நிதி உள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
வாலாஜா, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து திருவல்லம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருவல்லம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் இருக்கிறது. காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இருக்கிறது.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருவல்லம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை