திரிபுராந்தகர் சுவாமி கோவில், திருவிற்கோலம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் சென்னை மாநகரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது கூவம் என்று அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கூவத்திற்கு பேருந்து செல்கிறது. திருவள்ளூரிலிருந்து தென்மேற்காக 16 கி.மீ. தொலைவில் கூவம் ஆற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ தொலை இத்தலம் அமைந்தள்ளது. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பாதையில் சென்று கூவம் சந்திப்பில் இறங்கி செல்லலாம்.
சுவாமி : திரிபுராந்தகேசுவரர், திருவிற்கோலநாதர்
அம்பிகை : திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : கூவாக்கினி - குளம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் திருவாலங்காட்டில் நடனம் புரிந்த காளிக்கு அருள் புரியும் வகையில் பெருமான் இரட்சா நடனம் புரிகின்றார். அத்தேவி தர்க்க மாதா என்னும் பெயரில் காவல் தெய்வமாக விளங்குகிறாள். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். இத்தலத்திலிருந்துதான் கூவம் நீர் உற்பத்தியாகிறது. சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை அடையும் போது மாசுபடுத்தப்பட்டு விடுகிறது. இங்குள்ள இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனின் லிங்கத்திருமேனியை யாரும் தீண்டுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத்திருமேணி நாதர் என்ற பெயரும் உண்டு. இறைவனின் திருமேனி மழை அதிகமாக பெய்வதாக இருந்தால் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதென்றும் போர் ஏற்படுவதாக இருந்தால் சிவப்பு நிறம் படர்வதுமாக உள்ள அதிசயத் தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவியை வழிபட்ட பிறகுதான் மூலவரான திரிபுரநாதரை வணங்கவேண்டும் என்ற வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். மணமான தம்பதியர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
முப்புர அசுரர்களை வதம் செய்தற்பொருட்டு மேருமலையை வில்லாகக் கொண்டு ஏந்தியமையால் இத்தலத்திற்குத் திருவிற்கோலம் என வழங்கலாயிற்று. அச்சிறுத்த விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், நடராஜர், துர்க்கை, சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் உள்ளன. சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. தூங்கானை மாட அமைப்புடையது. இங்கு உருத்திராக்க மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் அமைப்பு : தெற்கு திசையிலுள்ள 5 நிலை ராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும் அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்கவேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். நவக்கிரக சந்நிதி வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது.
புராண வரலாறு : இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு செல்லாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் 'திருவிற்கோலம்' என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு 'அச்சிறுத்த விநாயகர்' என்று பெயர்.
ஆலய சிறப்பு : இந்த கோவிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடி பிறகே தினசரி பூசைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மீ தொலைவில் உள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.
தினந்தோறும் காலை 6 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : கடம்பத்தூர்
பஸ் வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை