சிவானந்தேஸ்வரர் கோவில், திருக்கள்ளில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருக்கள்ளம் என்னும் பகுதியில் இத்திருத்தலம் உள்ளது. சென்னைக்கு வடக்கே பெரிய பாளையம் பேருந்துப் பாதையில் கன்னிப்புதூரை அடைந்து, அங்கிருந்து இடப்புறம் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மற்றும் செங்குன்றம் ஆகிய ஊர்களில் இருந்தும் கன்னிப்புதூர் வந்து இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : சிவானந்தேஸ்வரர்
அம்பிகை : ஆனந்தவல்லி
தலமரம் : கள்ளி
தீர்த்தம் : சிவானந்த தீர்த்தம் - நந்தி தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம். இத்தலம் பிருகு முனிவர் வழிபட்ட பதி. இங்கு விநாயகர், முருகர், நால்வர், சோமாஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலம் குசத்தலை ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.
கோவில் அமைப்பு: கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கிறது. அதையடுத்து நேரே இறைவனை கருவறை உள்ளது. சிவானந்தேஸ்வரர் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதியும், அதையடுத்து அம்பாள் ஆனந்தவல்லி அம்மை சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சந்நிதிகளும் சோமஸ்கந்தர் வடிவில் அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.
ஆலயத்தில் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், காளத்தீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உறையும் சிவானந்தேஸ்வரரை பிருகு முனிவர் ஆயிரம் கள்ளி மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்து வந்தார். இறைவன் சக்தி தட்சிணாமூர்த்தி வடிவில் காட்சியளித்து வரமளித்தார். எனவே இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்தையும் பெற்று சிவானந்தப் பேறு பெறலாம்.
இறைவன் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு வெளியே தெற்கு நோக்கியபடி அமைந்துள்ளது. நால்வர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : சென்னை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை