கபாலீஸ்வரர் கோவில், திருமயிலை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் உள்ள ஒரு பகுதியாக இத்தலம் விளங்குகிறது. இதனை மயிலை எனவும் வழங்குவர். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 6 கி.மீ தொலைவில் உள்ளது. கபாலீஸ்வரர் என்பது கோயிலின் திருப்பெயர். மயிலாப்பூர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளது.
சுவாமி : கபாலீஸ்வரர்
அம்பிகை : கற்பகாம்பாள்
தலமரம் : புன்னை
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள் : இத்திருத்தலம் அம்பிகை மயில் வடிவத்தில் சிவபெருமானைப் பூசித்து வழிபட்ட தலமாகவும், வாயிலார் நாயனார் அவதாரத் தலமாகவும் விளங்குகிறது. இத்தலம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது எனவும் அதற்கு முன் இக்கோயில் சாந்தோம் கடற்கரையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இத்திருத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டு அற்புதத்தலமாக விளங்குகிறது.
இங்குள்ள இராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவநேசச் செட்டியர் என்னும் அன்பர் இறைவன் திருவருளால் பூம்பாவை என்னும் புதல்வியைப் பெற்றார். அவளின் 7 ஆண்டுப் பருவத்தில் பாம்பு தீண்டி இறக்க, அவள் பெற்றோர் அவள் உடலை எரித்து அதன் சாம்பலை ஒரு குடத்தில் வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் திருக்கோயிலுக்கு வரும்போது பூம்பாவையின் எலும்பும், சாம்பலும் இருந்த குடத்தை முன்னே வைக்க, அவர் திருப்பதிகம் பாடி பூம்பாவையை உயிர்பெற்று எழச் செய்தார். இடையில் 5 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்நங்கையை குடத்தினுள்ளேயே வளருமாறு புரிந்து பன்னிரண்டு வயதுப் பெண்ணாகத் தோன்றினாள். இங்கு சிங்கார வேலர் சந்நிதி தனிச் சிறப்புடையது. இத்திருத்தலத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா தனிச்சிறப்புடன் நடை பெறுகிறது.
கோயில் அமைப்பு : கிழக்கு மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 110 அடி உயரமும் உடையது. ஒரு பெரிய வெளிப்பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார் நர்த்தன் விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதனை கடந்து சென்றால் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கி இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
மேற்கு வெளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. இந்தப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையைல் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனிபகவான் அருள் புரிகிறார். தெற்கு பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்தில் முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.
தலவரலாறு : இங்கு சிவநேசர் என்பவர் சிவபெருமான் மீது அளவுகடந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும், அவரின் சைவ, சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீசுவரரை தியானித்து பதிகம் பாடினார். பதிகம் பாடி முடிந்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்த காரணத்தால் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவனுக்கு தொண்டு செய்து வந்தாள்.
காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : சென்னை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு