ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் இத்திருத்தலம் உள்ளது. திருஇடைச்சுரம் என்னும் தலம் தற்போது 'திருவடிசூலம்' என வழங்கப்படுகிறது. இத்தலம் செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் செங்கற்பட்டிலிருந்து கிழக்காக 7 கிமீ தொலைவில் உள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
சுவாமி : இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர்
அம்பிகை : இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகை
தலமரம் : வில்வம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் அம்பிகை பசு வடிவத்தில் பால் சொரிந்து வழிபட்டார். மேலும் இத்தலத்தில் கௌதம முனிவரும், சனற்குமார முனிவரும் வழிபட்டனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம்.
கோவில் அமைப்பு: கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் விசாலமான தெற்கு வெளிப் பிரகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம்.
மேலும் இந்த கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிரகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிரகாரம் வந்தால் தல விருட்சம் வில்வமரம் உள்ளது. இந்த வில்வ மரத்திற்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது.
தெற்குப் பிரகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால் இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர்.
கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
இத்திருத்தலத்தில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றார்கள். மூல லிங்கம் தீபஒளி பிரதிபலிக்கக்கூடிய மரகதலிங்கம். இங்கு இறைவனுக்குத் தீபாராதனை செய்யும் போது பலவகையான வண்ணங்கள் ஒளிரும். இதனை திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் அனைத்திலும் காணலாம்.
தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : செங்கல்பட்டு
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை