மாகாளேஸ்வரர் கோவில், இரும்பை மாகாளம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இத்தலம் திண்டிவனத்திலிருந்து தென்கிழக்கில் 30 கி.மீ. தொலைவில் திருச்சிற்றம்பலம் கிளை சாலையிலிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திரு அரசிலியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சுவாமி : மாகாள நாதர், மகாகாளேசுவரர்
அம்பிகை : குயில்மொழியம்மை , மதுர சுந்தர நாயகி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: ஊர் இரும்பை. கோயில் பெயர் மாகாளம். இயற்கை எழில் சூழ்ந்த ஊராக இது அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மாகாளர், கடுவெளிச் சித்தர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். இக்கோயிலின் பெருமையுணர்ந்த பக்தர்களால் இங்கு வந்து செல்வோரின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், ஆறுமுகக் கடவுள், நடராஜர், சிவகாமியம்மை, தட்சினாமூர்த்தி, துர்க்கை, சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இரும்பை 32 வது தலமாக விளங்குகிறது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமையை இத்தலம் கொண்டுள்ளது. இப்பாடலின் வாயிலாக இவ்வுரின் சிறப்புகளை அறிய முடிகிறது. பட்டினத்தாரும் இராமலிங்க அடிகளாரும் இவ்விறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இக்கோயிலில் கி.பி 1902 மற்றும் கி.பி 1936-37 ஆகிய ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறையினரின் ஆய்வின் மூலம் ஐந்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருத்தலபுராணம் : எல்லோருக்கும் கால பயம் உண்டு அதாவது மரணத்தைப் பற்றிய அச்சம்! நாம் மரணத்தைப் பற்றி அஞ்சினாலும், அஞ்சாவிட்டாலும் அது நம்மை விட்டு வைக்கப் போவதில்லை. ஆனால் பரமேஸ்வரன் பிறவா யாக்கை பெரியோன். அவருக்கு தோற்றமும் முடிவும் இல்லை. இதனால் அவர் மஹாகாலன் எனப்படுகிறார். இந்தத் திருப்பெயருடன் அவர் கோயில் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் பாரதத்தில் மூன்று உள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி, மயிலாடுதுறை அருகேயுள்ள அம்பர் மாகாளம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரும்பை இம்மூன்றும் மஹாகால க்ஷேத்திரங்களாகும்.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இரும்பை இருந்த சமயம். இப்பகுதியை குறுநில மன்னன் ஒருவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் இவ்வுரை அடுத்துள்ள கோட்டைகரையில் கோட்டை கட்டி (இப்பகுதியில் இப்போது ஆரோவில் அமைந்துள்ளது) அரசாண்டு வந்தான். அக்குறுநில மன்னன் நாட்டு நலப்பணியிலும் இரும்பை மாகாள ஈசன் ஆலயத்தின் வளர்ச்சிப் பணியிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தான்.
ஒருசமயம் அவனது எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் மழை இன்றி விளைநிலங்கள் விளையாமலும், குடிக்க தண்ணீர் கிடைக்காமலும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் மனம் கலங்கிய மன்னன் இரும்பை மாகாளேசுவரை வேண்டினான். அப்போது ஓர் உண்மை தெரியவந்தது.
கடுவெளிச்சித்தர் எனும் ஒரு மகான் மகாகாளேசுவரர் ஆலயத்தின் எதிரேயுள்ள குளக்கரை அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறார். அவரது மேனியை புற்று மூடிவிட்டது. ஒரு கரமும், சிரமும் மட்டுமே வெளியே தெரிகின்றன. அவரது தவம் கலைந்த பின் அவர் அருளால் மட்டுமே மழை பெய்யும். பஞ்சம் நீங்கும் என்ற விவரத்தை அக்குறுநில மன்னன் அறிந்தான். இதற்குத் தீர்வு காண மன்னன் இச்செய்தியை நாடு முழுவதும் பறை சாற்றினான். சித்தரின் தவம் கலைத்து மழை பொழியச் செய்வோருக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தான். ஆனால் முனி சாபத்துக்கு அஞ்சி எவருமே முன்வரவில்லை. அந்நாட்டு நடன மாது ஒருத்திக்கு மட்டும் துனிச்சல் வந்தது. சித்தர் தவம் செய்யும் இடம் சென்று வணங்கி நின்றாள். அப்போது காய்ந்த அரசமரத்து இலை சித்தரின் கையில் விழுவதையும், அதையும் காற்றையும் உண்டு கடுவெளிசித்தர் தன் பசி போக்கி தவத்தில் இருப்பதைக் கண்டாள். உடனே அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
வீட்டுக்குச் சென்று அரசஇலை வடிவில் உப்பு, காரம் இவற்றைச் சேர்த்து அப்பளம் செய்து மீண்டும் அரச மரத்தடி வந்தாள் நடன மாது. அந்த அரச இலை வடிவிலான அப்பளத்தை சித்தரின் கையில் போட முனிவரும் அதை உண்டார். உண்டவுடன் நாவில் ருசி ஏற்பட சித்தரின் தியானம் கலைந்தது. கண் விழித்த சித்தர் தன் எதிரில் நின்ற அழகிய நடனமாதைக் கண்டார். அவள் தவமுனிவரை வணங்கினாள். சித்தரும் தன் தவம் கலைந்த நிலையில் அவள் நோக்கத்தையும் உணர்ந்து கொண்டு அவளை ஆசீர்வதித்தார். அவளுடைய இல்லம் சென்று அவளது பாத புஜையை ஏற்றார். அதன் பிறகு பஞ்சப் பிணியிலிருந்த அந்நாட்டில் பலத்த மழை பெய்தது. நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. விவரங்களை மன்னன் அறிந்தான். கடுவெளிச் சித்தரும் நடன மாதும் மன்னன் அரண்மனை சென்றனர். ராஜ மரியாதையை ஏற்ற சித்தரும். நடன மாதுவும் இல்லம் திரும்பினர்.
சில மாதங்கள் கழித்து மஹாகாளேஷ்வருக்கு பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதில் ஒரு நடன நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. சித்தரின் தவம் கலைத்த நடன மாதுதான் அங்கே ஆடினாள். அரசனின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த மங்கை ருத்ரதாண்டவம் ஆடிய போது அவள் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது. உடனே அருகிலிருந்து ரசித்துக் கொண்டிருந்த சித்தர் எவ்விதத் தீய நோக்கமும் இன்றி அச்சலங்கையை அவள் காலில் கட்டி விட்டார். இதைக் கண்ட மக்கள் சித்தரின் பெருமை தெரியாது அவரை பழித்தனர். இதனால் கோபம் கொண்ட முனிவர். மஹாகாலேஸ்வர் சந்நிதிக்கு விரைந்தார். கூடவே மன்னனும், மக்களும் சென்றனர். தன் கடுங்கோபத்தை பாடலாக்கினார் சித்தர். எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாததுபோல் "புல்லரிவரெல்லாம் என் பெயரது அறியாமல் சொல்லினாற் சுட்டனர்" என சித்தமும் கொதிக்க நீ கல்லும் பிளந்து கடுவெளியாக மாகாளீசனே! என்றார். உடனே மூலவரது சிவலிங்கத்தின் பாணப் பகுதி மூன்றாக வெடித்துச் சிதறியது. இதன் ஒரு பகுதி 5 கி.மீ தொலைவில் விழுந்தது. வெடித்த பகுதியில் இருந்து இறைவனும் இறைவியும் தோன்றி சித்தரை அமைதிப்படுத்தினர். இக்காட்சி மன்னனுக்கும் நடன மாதுக்கும் மட்டுமே தெரிய மற்றவர்களுக்கு ஜோதியாக தெரிந்தது. சித்தரின் மகிமையை அறிந்த அனைவரும் வணங்கி மன்னிப்பு கேட்டனர். மனம் குளிர்ந்த சித்தர் உடைந்த லிங்கத்தை ஒன்று சேர மீண்டும் பாடினார்.
எட்டு இரண்டும் அறிந்த என்தனை
எட்டு இரண்டும் அறிந்த உன்தனை
எட்டு இரண்டும் அறிந்த அத்தனை
எட்டு இரண்டும் ஒன்றதாகுமே
என்றார் உடனே வெடித்த சிவலிங்கம் ஒன்று சேர்ந்து பிறகு சித்தரின் திருக்கரத்தால் செப்புத் தகட்டினால் பந்தனம் செய்தனர் என்றாலும் வெடித்த வடி இன்னமும் உள்ளதைக் காண முடிகிறது. இதன் பின் அப்பகுதி வாழ் மக்களும் எக்குறையும் இன்றி வாழ்ந்து வந்தனர். இதனிடையே பின்னமான மூலவருக்கு பதிலாக மாற்று லிங்கம் அமைக்க காசியிலிருந்து புதிய லிங்கம் கொண்டு வந்து அதை மாற்றிட சிலர் முயன்றனர். அப்போது வானில் ஒரு அசரீரி ஒலித்தது. என்னை அகற்ற வேண்டாம் என்ற சொல் கேட்க உடைந்த லிங்கமே மூலவராக விளங்குகிறது.
கோயில் அமைப்பு : ஆலயத்தில் ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பெயர் மகாகாளேசுவரர் மற்றும் மதுரபுரீசவரர். இறைவியின் சந்நிதி தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் குயில் மொழியம்மை மற்றும் மதுரசுந்தர நாயகி ஆகும். தல தீர்த்தம் மாகாள தீர்த்தம்.
வெளியில் வேம்பு மரத்தடியில் ஸ்ரீவிநாயகர் இவரது பெயர் ஜலம் தந்த ஸ்ரீவிநாயகர் பிரகார கோஷ்டத்தில் ஸ்ரீவிநாயகர் தட்சணாமூர்த்தி ஸ்ரீலிகங்கோற்பவர் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சுவற்றில் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
இது தவிர விநாயகர், ஆறுமுகப்பெருமாள், சண்டேசுவரர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம் அருகே காசி லிங்கம் உள்ளது.
கல்வெட்டுச் சான்றுகள் : கி.பி 1207-1208 கால கல்வெட்டில் இவ்வுர் ஜெயங்கொண்ட சோழ மண்டலம் மட்டூர் நாட்டில் உள்ள திருமாக்காளம் என்று குறிப்பிடபர்பட்டுள்ளது. இக்கல்வெடடு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 29 ஆம் ஆடசி ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் மையப் பகுதி தென்புறச் சுவறில் சுந்தர பாண்டிய தேவனின் கல்வெட்டு காணப்படுகிறது. ஆனால் ஆண்டு குறிப்பிடப்படுவதில்லை. இறைவனுக்கு திருப்பணி செய்ய விவசாய நிலங்களுக்கு வரிவிலக்கு அளித்த ஆணை இக்கல்வெட்டில் காணப்படுகிறது. மூலவர் கருவறையின் மேற்புறச் சுவரில் கி.பி 1295 ஆண்டு மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு காணப்படுகிறது. இதுவும் நிலக்கொடை குறித்து கூறுவதாகும். இதே மன்னன் காலத்திய வேறொரு கல்வெட்டு ஒன்று கி.பி 1289 ல் பொறிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் தெற்கு மற்றும் கிழக்கு சுவறில் இவை காணப்படுகின்றன.
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திண்டிவனம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை