ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருக்கச்சியேகம்பகம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது. இது பிருத்வி (நிலம்) தலம். சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து வசதிகள் அதிகம் இருப்பதால் இத்தலத்திற்கு செல்வது மிகவும் எளிது. சென்னை செங்கல்பட்டு அரக்கோணம் வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.
சுவாமி : ஏகாம்பரநாதர், திருவேகம்பர், ஏகாம்பரேசுவரர்
அம்பிகை : ஏலவார்குழலி
தலமரம் : மாமரம் - வேதங்களே மாமரமாம்
தீர்த்தம் : சிவகங்கை, கம்பாநதி
பதிகம் :
திருநாவுக்கரசர் - 7
திருஞானசம்பந்தர் - 4
சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள் : பஞ்சபூதத்தலங்களில் பூமித்தலமாகவும் முக்தி தலங்களில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. இத்தலம் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் அடிகள் காடவர்கோன் அவதாரத்தலம். இத்திருத்தலம் கிருஷ்ணதேவராயர் கட்டிய 172 அடி உயரம் உடைய இராஜகோபுரத்துடன் கோயில் மிகச் சிறப்பாக விளங்குகிறது. மேலும் சாக்கிய நாயனார் முக்தித் தலமாகவும் பல சைவ, வைணவத் திருமடங்கள் விளங்கும் தலமாகவும் விளங்குகிறது. இத்தலம் மூவர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். காஞ்சிபுரம் இங்கு பிருத்வி லிங்கமாக ஈசன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையாது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம் 190 அடி உயரமாகவும் 9 நிலைகளை உடையதாகவும் அமைந்துள்ளது. நான்காம் பிரகாரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபம் பல சிற்ப கலை நுணுக்கங்களைக் கொண்டது. ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் ஈசான மூலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. சுவாமி அம்பிகையால் மணல் கொண்டு அமைக்கப்பட்ட சுயம்பு மூர்த்தியாவார். அன்னை காமாட்சி தவம் புரிந்து இறைவனிடம் 2 நாழி நெல் பெற்று 32 அறங்கள் புரிந்த தலம். கம்பா நதியின் கரையில் அம்பிகை தவம் புரிந்தாள். இது திருக்குளமாகக் கோயிலுள் உள்ளது. பலி பீடத்தின் அருகில் வைப்புத் தலமான கச்சி மயானம் தனியாக உள்ளது. இங்கு பங்குனி உத்திரப் பெருவிழா தனிச் சிறப்புடையது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் தனியாக அம்பாள் சந்நிதி இல்லை. மேலும் சுந்தரர் இடக்கண்பார்வை பெற்ற பதி. இங்கு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் திருமடம் தொண்டை மண்டல ஆதீன ஞானப் பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருவாடுதுறை ஆதீனக் கிளை மடம் உள்ளன. மேலும் பல சைவ வைணவத் திருமடங்கள் இத்தலத்தில் விளங்குகின்றன. இங்கு பல்லி சத்தம் கேட்பதில்லை
தல வரலாறு : ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையை பணித்தார். அம்பிகையும் இந்த பூவுலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கி பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். வெள்ளத்தில் மணல்லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி அருள்பாலித்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களை கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு 32 அறங்களைச் செய்யப் பணித்தார். அவ்வாறே அம்பிகையும் காமாட்சி என்ற பெயரில் காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சுந்தர மூர்த்தி நாயனார் திருவெற்றியூரில் தன் மனைவி சங்கில் நாச்சியாரை மகிழ மரத்தடியில் உன்னைப் பிரியேன் என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமான் சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரை பிரிந்து திருவெற்றியூரிலிருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண்பார்வையை இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சிபுரம் தலத்தில் பெற்றார்.
காலை 6 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு