திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது திருச்செங்கோடு எனப்படுகிறது. ஈரோட்டுக்குக் கிழக்கே 18 கி.மீ தொலைவில் உள்ளது. சேலத்திலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்ககிரி ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சேலம் ஈரோடு நாமக்கல் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. நாமக்கல்லிலிருந்து 32 கி.மீ சென்றும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : அர்த்த நாரீசுவரர்
அம்பிகை : பாகம் பிரியாள்
தலமரம் : இலுப்பை வன்னி
தீர்த்தம் : தேவ தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தின் 60-ம் படி சிறப்பு பெற்றது. இத்தலத்தின் படிகளின் ஓரிடத்தில் நீளமான பாம்பு வடிவத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. விறன்மிண்ட நாயனார் அவதாரப் பதி. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம். இதனை மேலவீதியில் நின்று பார்க்கும்போது மலை நாக வடிவில் காணப்படுவதால் நாககிரி நெடுவேள் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் மலையின் மீது உள்ளது. 1200 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
கோயில் அமைப்பு : இத்தலத்தில் உள்ள கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலைச் சுற்றி மதில் சுவர் அமைந்துள்ளது. அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகர் என்று அழைக்கப்படும் ஈசன் சுயம்பு வடிவில் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் வாய்ந்தது. செங்கோட்டு சந்நிதியில் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பாட்டிற்கு ஒரு சான்றாகக் காட்சி அளிக்கின்றன. மலையடிவாரத்தில் முருகக்கடவுள் தேவிமாருடன் எழுந்தருளியுள்ளார். மலைமேல் சுப்பிரமணியக்கடவுள் சன்னிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. திருக்கோவிலுள் ஆதிகேசவபெருமாள் சந்நிதி உள்ளது. மலைமேலிருந்து நோக்கினால் காவிரி ஆறு தெரிகிறது. மலை செந்நிறமாக காணப்படுவதால் திருச்செங்கோடு என்னும் பெயர் உண்டாயிற்று. மேலை வீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் காணப்படும். இதனால் இதற்கு நாககிரி என்ற பெயரும் உண்டாயிற்று.
படிக்கட்டு வழியே மலைக்குச் செல்லும் வழியில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆதிசேஷன் மஹாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தின் சுவாமி மேற்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்தில் திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தை அருளிச் செய்து மக்களின் குளிர் சுரத்தை நீக்கினார். இத்தலத்தில் செங்கோட்டு வேலவர் சந்நிதி தனிச் சிறப்புடையது. மூலவர் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது. ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இங்கு விநாயகர் செங்கோட்டு வேலர் ஆதிகேசவப் பெருமாள் நாகேசுவரர் பிருங்கி முனிவர் அர்த்த நாரீசுவரர் மரகதலிங்கம் கேதார கெளரி முதலிய சந்நிதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஈரோடு
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு