திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கரூர் மாவட்டத்தின் தலைநகராக இத்திருத்தலம் உள்ளது. இது பல இடங்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : பசுபதி நாதர், பசுபதீசுவரர்
அம்பிகை : கிருபாநாயகி, சௌந்தரிய நாயகி, அலங்கார வல்லி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : ஆம்பிராவதி நதி
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் புகழ் சோழ நாயனார் அரசாண்ட தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம். இத்திருவூர் ஆம்பிராவதி நதியின் வடகரையில் உள்ளது. காமதேனு வழிபட்டு “படைத்தல் தொழில்” புரிய வரம் பெற்று அனைத்தையும் படைத்தது. அதனால் இவ்வூருக்கு கருவூர் என்று பெயர் பெற்றது. புகழ்சோழ நாயனார் வேந்தராய் ஆண்டு பின் திருவடிப்பேறு ஏய்திய திருவூர். எறிபத்த நாயனார், சிவகாமி ஆண்டார் முதலியோர். பேறுபெற்ற தலம்.
கோயில் அமைப்பு : இவ்வாலயம் மிகவும் பெருமைவாய்ந்ததாகும். கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும், ஏழு கலசங்களையும் கொண்டது. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். முன்கோபுரத்தில் புராண காட்சிகளை விளக்கும் கதைச் சிற்பங்கள் அழகுடன் காட்சி அளிக்கின்றன. கோவிலினுள் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர். ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். இந்த லிங்கம் சற்றே சாய்ந்த நிலையில் அமைந்துள்ளது. பங்குனி மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியனின் ஒளி லிங்கத்தில் படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். உட்பிரகாரத்தில் தெற்குச்சுவற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனிசந்நிதி உள்ளது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆறுமுகன் ஆகியோரின் திருஉருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கி சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும். சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இத்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கி சித்தர் சந்நிதி உள்ளது. எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார் ஆகியோர் வாழ்ந்து பேறு பெற்ற பெருமையுடையது. இத்தலம் ஆகும்.
இத்தலம் காமதேனு பூசித்ததால் ஆநிலை எனப் பெற்றது. ஏறிபத்த நாயனார் தொண்டு செய்த பதி. இங்குள்ள கொடிமரம் கருங்கல்லால் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இங்கு விநாயகர், முருகர், அறுபத்து மூவர், நடராஜர், செங்கோட்டு வேலர், மகாலட்சுமி, கரியமால் வரதர், பஞ்சபூதலிங்கம், பைரவர், அருணகிரிநாதர், நவக்கிரகம், தண்டாயுதபாணி முதலிய சந்நிதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
ரயில் நிலையம் : கரூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு