வெள்ளடையீசுவரர் கோவில், திருக்குருகாவூர் வெள்ளடை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மி. உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 1 கி.மி. சென்றால் தலத்தை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும்.
சுவாமி : வெள்ளடையீசுவரர், வெள்விடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர்
அம்பிகை : நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கன்னி அம்மை
தீர்த்தம் : பால் கிணறு
தலவிருட்சம் : வில்வம்
பதிகம் : திருஞானசம்பந்தர், சுந்தரர்
சிறப்புக்கள் : இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம். அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. ஆண்டுதோறும் பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும் தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கோயிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
கோவில் அமைப்பு : தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இந்நாளில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. இறைவன் வெள்விடை நாதர் சதுர ஆவுடையார் மீது சிறிய பாணம் கொண்ட லிங்க உருவில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இறைவி காவியங்கன்னி அம்மை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இறைவன் கருவறை கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்ணு கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். கருவறைப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, நடராஜப் பெருமான் சந்நிதி, காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகளுடன், சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் பைரவர், சூரியன், மாரியம்மன், ஸ்ரீஅய்யனார் ஆகியோரின் திருவுருவங்களும் அமைந்துள்ளன. கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன் தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து இவ்வூருக்கு எழுந்தருளுகையில் தாகமும், பசியும் அவரையும் அவர் தொண்டர் கூட்டத்தினரையும் வருத்திற்று. இறைவர் அந்தணர் உருவம் கொண்டு வழியில் தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி அவர்களுக்குத் தண்ணீரும் கட்டமுதும் அளித்தார். சுந்தரருக்கு இறைவன் கட்டமுது அளித்தருளிய விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் இத்தலத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும்.
தல வரலாறு: சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை