குந்தளநாதர் கோவில், திருக்குரக்குக்கா
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயில் திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு என்ற ஊரை அடைந்து, திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
சுவாமி : குந்தளநாதர், குந்தளேஸ்வரர், குண்டலகர்ணேஸ்வரர்
அம்பாள் : குந்தளநாயகி
தீர்த்தம் : கணபதி நதி
பதிகம் : திருநாவுக்கரசர்
சிறப்புகள் : பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆஞ்சனேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சனேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள். ஆலய தீர்த்தம் கணபதி நதி எனப்படும் பழவாறு. இதில் நீராடினால் புத்திர பாக்கியம் ஏற்படும், திருமணத் தடை நீங்கும்.
தல வரலாறு : இராமேஸ்வரத்தில் இராமபிரான் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதன் பின்னர் அந்த லிங்கத்தை தனது ஊரான சித்ரகூடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார். அதனால் லிங்கத்தை தனது வாலால் பெயர்த்தெடுக்க முயன்றார். அந்த முயற்சியில் அவரது வால் அறுந்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் உனது சக்தியும் இழந்து போகட்டும் என்று சாபமிட்டார்.
அனுமன் சாபவிமோசனம் கேட்க, எந்த இடத்தில் செல்லும்போது உனது வால் வளர்கிறதோ, அங்கு சிவபூஜை செய்து வழிபடு. அந்த தலம் உனது பெயராலேயே அழைக்கப்படும் என்று அருளினார் சிவபெருமான். ஆஞ்சநேயர் வழிபட்ட இத்தலம் 'குரக்குக்கா' என்ற அழைக்கப்படுகிறது. மூலவர் 'குந்தள நாதர்' என்றும் 'குண்டல கர்ணேஸ்வரர்' என்றும் வணங்கப்படுகின்றார். அம்பிகை 'குந்தள நாயகி' என்றும் 'ஏலாசௌந்தரி அம்பிகை' என்றும் போற்றப்படுகின்றார். அகத்தியர், மார்க்கண்டேயர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் அனுமனுக்கு சிறப்பு அர்ச்சனையும், ஒவ்வொரு அமாவாசை அன்று கார்யசித்தி யாகமும் நடைபெறுகிறது. கோயிலின் அருகில் கணபதி நதி ஓடுகிறது.
கோவில் அமைப்பு : இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரமில்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முற்பட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை