வஜ்ரஸ்தம்பநாதர் கோவில், திருமழபாடி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது.
சுவாமி : வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர்வைத்தியநாதசுவாமி, வச்சிரதம்பேஸ்வரர்
அம்பாள் : அழகம்மை
தல விருட்சம் : பனை மரம்
தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்
சிறப்புக்கள் : ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்தது.
இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பது இத்தல சிறப்பாகும்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட தலம். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.
தல வரலாறு : இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழப்பாடி திருத்தலத்தில் பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் தடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு தடைபெறும் திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும். கொள்ளிட நதி இத்தலத்தில் வடக்கு முகமாக உத்தரவாஹினியாக ஓடுவது இத்தலத்தின் சிறப்பம்சம்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவையாறு, தஞ்சாவூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை