உஜ்ஜீவனேஸ்வரர் கோவில், கற்குடி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது 'உய்யக்கொண்டான் திருமலை' என்று வழங்கப்படுகிறது.
சுவாமி : உஜ்ஜீவநாதசுவாமி, உச்சிநாதர், கற்பகநாதர், முத்தீசர்
அம்பிகை : அஞ்சனாட்சி, மைவிழியம்மை, பாலாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பொன்னொளி ஓடை, குடமுருட்டியாறு, ஞானவாவி, எண்கோணகிணறு, நாற்கோணகிணறு.
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். கோயில் மலையின் மீது உள்ளது. கரன் வழிபட்ட தலம். முனிவர்களுக்கு குருமூர்த்தியாக இருந்து பெருமாள் விழுமிய நூல்களை உபதேசித்த தலம். மார்க்கண்டர் வழிபட்டு பேறு பெற்ற தலம். ஈழநாட்டு மன்னன் உச்சிகாலத்து வந்து வழிபட்டு வீடுபேறு எய்திய திருவூர். இங்கு நேர்த்திக்கடன் கொண்டோரால் பானக வழிபாடு நிகழ்கின்றது.
இத்தலம் மலைமேல் உள்ளது. குன்றின் பாறைகளில் செதுக்கப்பட்ட 64 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம். இவ்வாலயம் 5 பிரகாரங்களுடன், 4 புறமும் மதில் சூழ்ந்தும் அமைந்துள்ளது. மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் வீற்றிருக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது. குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. இறைவன், இறைவி சந்நிதி தவிர பிரம்மா, துர்க்கை, பைரவர், மஹாலக்ஷ்மி, சக்தி கணபதி, சூரியன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவிலுக்கு பல தானங்களும் திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் 'நந்திவர்ம மங்கலம்' என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அம்பாள் சந்நிதி பாலாம்பிகை கிழக்கு நோக்கியது. இத்தலத்திற்கு அருகில் 6 கி.மீ. மேற்கே 'வயலூர் முருகப் பெருமான் திருக்கோயில்' உள்ளது.
திருத்தல வரலாறு : மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீங்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இறங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும் இறைவழிபாட்டில் சிறந்து விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்ட போது அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.
தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் அகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று.
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருச்சி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை