தாயுமானவர் கோவில், திருச்சிராப்பள்ளி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சி ரயில்நிலையத்தின் அருகே மலை மேல் உள்ளது தமிழகத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
சுவாமி : தாயுமானவர்
அம்பிகை : மட்டுவார்குழலம்மை
தீர்த்தம் : காவிரி, சிவகங்கை, நன்றுடையான், தீயதில்லான், பிரம்ம தீர்த்தம்.
திருச்சிராபள்ளி பெயர் காரணம் : மூன்று தலைகளையுடைய திரிசிரன் என்னும் அரக்கனை அடக்கி, அவனது வேண்டுதலின் பேரில் தன் பெயரை திரிசிராநாதர் என்றும், தான் தங்கியிருநத மலையை திரிசிராமலை என்றும் பெயர் சூட்டியதை ஏற்றுக்கொண்ட இறைவன் தாயுமானவர் ஆன பிறகு அந்தப் பெயரே நிலைத்து விட்டது. ஊரின் பெயர் திருச்சிராப்பள்ளி ஆனது.
திருத்தலச் சிறப்புகள்: திருக்காளத்தி, திருக்கோணமலை போன்று இதுவும் தென்கயிலாயம் எனப்படும். சிவபெருமான் மீது பேரன்பு வாய்ந்த ஒருமாது கருவுற்றிருந்தாள் மகப்பேற்றுக்காலம் வந்தது. காவிரிப் பெருவெள்ளத்தால் அவளின் தாய்வந்து உதவ முடியவில்லை. சிவபெருமானே தாயைப்போல் வந்து பேற்றுக் காலத்தில் உதவி புரிந்து அருளினான். இதனால் தாயுமானவர் என்னுந் திருப்பெயர் வழங்கப்படுகின்றது. தாயுமான அடிகள் தங்கி அருமறைகேட்ட திருவூரும் இதுவே. திருக்கோயில் மலைமேல் இருக்கின்றது. மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலை எடுப்பித்தவன் முதல் மகேந்திரவர்மன் இவன்தான் சைவனானதையும், திருவதிகையில் பாடலிபுத்திரத்திலமண் பள்ளியொடும் பாழிகளும் கூட இடித்துக் கொணர்ந்து குணதரேச்சரம் கட்டியதையும் எட்டு வடமொழி செய்யுளாள் ஆன கல்வெட்டு இங்குள்ளது. இங்கிருந்து பார்த்தால் திருவானைக்கா, திருவரங்கம் முதலிய திருவூர்களின் திருக்கோபுரங்களும், காவிரி கொள்ளிடம் முதலிய ஆறுகளும், திருச்சிராப்பள்ளி நகரும் நன்கு தெரியும். திரிசிரன் வழிபட்ட திருவூர் என்பர். இந்திரன், நான்முகன், இராமன், அனுமன், நாக கன்னியர் முதலியோர் வழிபட்ட திருவூர் அனுமன் வழிபட்ட அடையாளமாக அனுமக்கொடியும், முத்திரையும் கோவில் உரிமையாக வழங்கி வருகின்றன.
தல புராணம்: தனகுத்தன் என்ற வணிகனின் கர்ப்பிணி மனைவி ரத்னாவதி சிவபக்தையாகத் திகழ்ந்தாள் இவளுக்கு பிரசவம் பார்க்க உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் கிளம்பி வந்தாள். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. இதனிடையே அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தன்னைக் காக்கும்படி திருச்சி மலைக்கோட்டையில் இருக்கும் திருசிராநாதரிடம் வேண்டினாள் அவர் அவளது தாயைப் போலவே உருவெடுத்து சென்று பிரசவம் பார்த்தார். சில நாட்கள் அங்கேயே தங்கினார். ஆற்றில் வெள்ளம் குறைந்து ரத்னாவதியின் தாய் வரவே தன்னைப்போலவே இன்னொருத்தி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். ரத்னாவதிக்கு பேரதிர்ச்சி. அப்போது சிவன் இருவருக்கும் காட்சி கொடுத்தார். தாயாக இருந்து பிரசவம் பார்த்ததால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் ஏற்பட்டது.
சாரமா முனிவர் என்னும் சிவபக்தர் இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒரு சமயம் வனிகன் ஒருவன் முனிவரின் நந்தவனத்தில் இருந்த மலர்களைத் திருடி அரண்மனையில் விற்று வந்தான். அம்மலர்களின் அழகில் மனதைப் பறிகொடுத்த மன்னன் வனிகனை தினமும் மலர் கொண்டு தரும்படி சொன்னான். அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால் முனிவரின் சிவபூஜை தடைபட்டது. விஷயமறிந்த அவர் மன்னனிடமே முறையிட்டார். ஆனாலும் மன்னன் அதைக் கண்டுகொள்ளவில்லை. சிவபெருமான் அவனை சோதிக்கும் வகையில் அரண்மனை பகுதியில் மண்மழை பொழியச் செய்தார் திருந்திய மன்னன் சிவனிடம் மன்னிப்பு கேட்டான். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு செவ்வந்தி நாதர் என்ற பெயரும் உண்டு
கோயில் அமைப்பு : தாயுமானவர் சன்னதியைச் சுற்றி பாதாளத்தில் ஒரு பிரகாரம் அமைத்து இரண்டு அடுக்குகளுடன் கூடியதாக சிவன் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரகாரத்தில் பிரம்மா, அகத்தியர், இந்திரன், ஜடாயு, அத்திரி மகரிஷி, துர்மகேது, திரிசரன், அர்ஜுனன், ராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், நாககன்னி, சாரமா முனிவர், ரத்னாவதி ,மவுனகுரு, சுவாமி தாயுமானவ அடிகள், சேக்கிழார் காட்சி தருகின்றனர். சிவன் சன்னதி எதிரில் தான் கொடிமரம் இருக்கும். ஆனால் இங்கு சன்னதிக்கு பின்புரம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே பிரதான வாசலும் கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக மன்னனைத் தண்டிக்க, சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால் சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. தினசரி பூஜையின் போது சன்னதிக்குப் பின்புறத்தில் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து தேவாரம் பாடுவது இப்போதும் வழக்கமாக உள்ளது.
சிவன், அம்பாள், மட்டுவார்குழலி மற்றும் உச்சிப் பிள்ளையார் ஆகிய மூவரும் இந்த குன்றில் தனித்தனி கோயில் கொண்டு அருளுகின்றனர். 417 படிகளுடன் 273 அடி உயரத்தில் அமைந்த குன்று இது. இக்குன்றை வெவ்வேறு திசைகளில் இருந்து பார்க்கும்போது சிவனின் வாகனமான ரிஷபம் அம்பிகையின் வாகனமான சிம்மம் மற்றும் தும்பிகைகையை நீட்டி அமர்ந்த கோலத்தில விநாயகர் என மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறது.
கொடிமரத்தில் பல பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை சங்குச்சாமி என்று அழைக்கிறார்கள். இவர் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக்கொண்டிருப்பவராம். இவருக்கு சங்கநாதர் என்ற பெயரும் உண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்படாகும் போது இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்று சொல்கிறார்கள்.
இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால் அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து மண்டபம் எழுப்பியுள்ளனர். நந்திக் கோயில் என்றழைக்கப்படும் இங்கு பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. நந்தியின் பின்புறம் 35 அடி உயரத்தில் கல் தீபஸ்தம்பம் இருக்கிறது.
தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருச்சி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு