அக்னீஸ்வரர் கோவில், மேலைதிருக்காட்டுப்பள்ளி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது. தஞ்சாவூர் - திருச்சி ரயில் பாதையில் பூதலூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
சுவாமி : தீயாடியப்பர் அக்கினீசுவரர்
அம்பிகை : வார்கொண்டமுலையாள்
தலமரம் : வன்னி வில்வம்
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், காவிரி, குடமுருட்டி ஆறு
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். இங்கு திருமால், பிரம்மன், சூரியன், அக்கினி, பகீரதன், உறையூர்ச்சோழனின் மூத்த மனைவி ஆகியோர் வழிபட்ட பதி. இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதியில் எல்லாக் கிரகங்களும் சூரியனை பார்த்தவாரே அமைந்துள்ளன. இத்தலம் முதல் ஆதித்தியசோழன் ஆண்ட காலத்தில் திருப்பணி பெற்ற கோயில்.
இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், முதலிய நாட்களில் நீராடி வழிபடுதல் சிறப்பாகும்.
உறையூர் நந்தவனத்திலிருந்து பணியாளன் ஒருவன் இறைவனுக்காக பூத்த இரண்டு செவ்வந்தி பூவை உறையூர் சோழ மன்னனுக்குத் தர அவன் தன் இரண்டு மனைவியருக்கும் கொடுத்தான். மூத்த மனைவி அப்பூவை அரண்மனையிலுள்ள சிவபெருமானுக்குச் சாத்தி வழிபட்டாள். இளைய மனைவி அதனை தான் சூட்டி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூரில் மண்மாரி பொழிந்து அழிந்தது. மூத்த மனைவி இருந்த திருக்காட்டுபள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று கூறுவர்.
கோயில் அமைப்பு : இத்தலம் 5 நிலை கோபுரத்துடன் 5 பிரகாரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் கருவறை தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளப்பகுதியில் இருக்கிறது. சிவலிங்கம் உருவில் சிறியது. லிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதிப்பதில்லை. பக்தர்கள் தொலைவிலிருந்துதான் இறைவனை தரிசிக்க வேண்டும். இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனிசந்நிதி உள்ளது. பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும். பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டுகள் கூறுகின்றன. அருகே பெருமாளுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ளது.
திருத்தல வரலாறு : தேவர்களும், அவர்களின் தலைவனான இந்திரனும், இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும், அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரை கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார்.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பூதலூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை