பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில், திருக்கண்டியூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சை-திருவையாறு பேருந்துச் சாலையில் தஞ்சையிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. திருவையாற்றுக்குத் தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது
சுவாமி : வீரட்டானேசுரர், பிரம்மசிரகண்டீசுவரர்
அம்பிகை : மங்கள நாயகி.
தலமரம் : வில்வமரம்
தீர்த்தம் : நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தக்ஷதீர்த்தம், குடமுருட்டி ஆறு.
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: எண்பெரு வீரத் திருவூர்களுள் (அட்ட வீரட்டம்) இதுவும் ஒன்று. சாதாதபர், நான்முகன், நாமகள் அவர்களின் திருவுருவங்கள் திருக்கோவிலினுள் இருக்கின்றன. மாசி மாதம் பதின்மூன்று முதல் பதினைந்தாம் நாட்கள் முடிய சூரிய வழிபாடு நடத்தப்பெறுகின்றது. இத்தலத்தில் சரஸ்வதிதேவிக்கும், பிரம்மதேவருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடன், ஜபமாலையுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி அழகிய திருமேனியுடன் காட்சி அளிக்கிறாள். தன்னை இகழ்ந்த பிரம்மனின் தலையைக் கிள்ளி எரிந்த தலம் திருக்கண்டியூர் எனப் போற்றப்படுகிறது. பூமன் சிரம் கண்டி என்று முதலில் பேசப்படும் இத்தலம் காவிரிக்கு தென்கரையிலுள்ள 12 வது தலமாகும். அப்பரடிகள் தமது அடைவ திருத்தாண்டகத்தில் காவிரியின் கரைக் காண்டி வீராட்டானம் என இத்தலத்தை குறிப்பிட்டுள்ளார். இங்கு பூமன் என்னும் பிரம்ம தேவனின் ஒரு தலையைத் துண்டித்து கண்டித்திருக்கிறார் நீலகண்டர். பிரம்மன் சிரத்தை இறைவன் தன் திருசூலத்தால் கண்டனம் செய்த காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. சதாதப முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டுவரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் என்று பெயர். ஆணவம் அகன்ற பிரம்மன் இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இத்தலம் 'பிரம்மபுரி' என்றும் வழங்கப்படுகிறது. சூரியன் வழிபட்ட தலம். திருவையாற்றை மையமாகக் கொண்ட ஏழு தலங்களில் ஒன்று. எனவே இங்கு ஏழு தலங்களிலுள்ள லிங்கத் திருவுருவங்களும் உள்ளன. மாசி மாதத்தில் 13, 14 மற்றும் 15-ஆம் நாட்களில் மாலைப்பொழுதில் 5.45 முதல் 6.10 மணி வரை சூரியஒளி இறைவன் மீது படும் சிறப்புடையது. அருணகிரிநாதர் பாடல் பெற்றதலம்.
தலப்புராணம் : இத்தலத்தில் சதாபர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். இம்முனிவர் பரதோஷத்தில் காளத்தி சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது காளத்திக்குத் தக்க நேரத்தில் செல்ல முடியவில்லை. அப்போது இறைவன் அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டி அருளினார். அரியும் அயனும் தாம் தாம் முழுமுதற் கடவுள் எனத் தம்முள் வாதிட்டு போரிட அதை விலக்க இறைவன் அடிமுடியில்லாத ஜோதியாய் விண்ணில் தோன்றினார். அத்தோற்றத்தை (ஒளிப்பிழம்பை) கண்டு திருமால் கைகூப்பி தொழுதார். பிரம்மன் தனது அகந்தை காரணமாக அவ்வொளிப்பிழம்பைக் கண்டு வணங்காமல் தன் உச்சியில் உள்ள ஐந்தாவது தலையால் சிவனை இகழ்ந்தார். பிரம்மனின் செருக்கை அடக்க நினைத்த ஈசன் நீல நிறம் பொருந்திய ஒளி விளங்கும் மேனியும், சிலம்புகள் ஒலிக்கும் திருவடியும், நஞ்சைக் கக்கும் செந்நிறப் பாம்பை அரைஞாணாகக் கட்டிய இடையும், பல கோடி தலைகளால் ஆன மாலைகள் கொண்ட மார்பும், சூலம், பரசு, உடுக்கை ஏந்திய கைகளும், மூன்று கண்களும், இளம்பிறை போன்ற கோரைப் பற்களும், அக்கினி மயமான செவ்வானம் போன்ற சிவந்த சடையும், கோபச் சிரிப்பும் கொண்ட பைரவரைத் தோற்றுவித்து தன்னை இகழ்ந்த பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து வருமாறு பணிக்கிறார்.
பைரவர் இறைவனின் ஆணைப்படி தாமரையான் தலையைக் கொய்தார். இச்செயல் சிவபெருமானின் செயலாக கொள்ளப்படுகிறது. ஆதியில் சிவனைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்தனவாம். இதனால் உமாதேவி உட்பட பலரும் ஆள்மாறாட்டம் செய்து கொண்டனர் என்பதற்காகவே பிரம்மனது தலையொன்றைப் பசுபதி வாங்கிவிட்டாராம் எனவும் கூறப்படுகிறது.
திருத்தல அமைப்பு : இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு சுற்றுகள் கொண்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம் எழில்மிகுந்து காட்சி அளிக்கிறது. கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியன உள்ளன. வாயிலுக்கு வலப்புறம் தெற்கு நோக்கி அம்மன் திருமுன் அமைந்துள்ளது. பழமையான அம்மன் திருமுன்களில் இது ஒன்றாகக் கருதப்படுகிறது. வாயிலின் இடப்புறம் தலமரமான வில்வமரம் உள்ளது. உள்வாயில் கடந்து இடப்புறம் சென்றால் துணைவியாருடன் சுப்பிரமணியர் உள்ளனர். எதிரே ஆடல்வல்லான் அரங்கம் உள்ளது. பைரவரும், வெவ்வுறு வகை விநாயகர் வடிவங்களும்,, சூரியனும், அமர்ந்த கோலத்தில் மங்கையொருபாகரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர்.
கருவறையில் வீரட்டேசுவரர் பிரம்மசிரக்கண்டீசுவரர், பிரம்மசிரச்சேதர் என்றழைக்கப்படும் இறைவன் லிங்கத் திருவுருவில் அருள் பொழிகிறார். கருவறைச் சுவர்புரைகளில் அயனும், துர்க்கையும், லிங்கோத்பவரும், பிச்சை எடுக்கும் பெம்மானும் காட்சி தருகிறார்கள்.
கருவறைக்கு முன் அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் உள்ளன. அர்த்த மண்டபத்தின் வாயிலுக்கு வலப்புறம் ஐம்பெரும் பூதத்தல லிங்கத் திருவுருவங்களும், சப்த(ஏழு) தல லிங்கத் திருவுருவங்களும் உள்ளன. மேலும் சதாதப முனிவருக்குக் காட்சி தந்த காளத்திநாதரின் லிங்கத் திருவுருவும் உள்ளது. இடப்புறம் சதாதப முனிவர், சூரியன் வடிவங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஒன்பான் கோள்களில் சூரியன் தன் இரு துணைவியாருடன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தையொட்டி அயனும், கலைமகளும் காணப்படுகின்றனர். அயனின் நான்கு முகங்களும் நான்கு திக்குகளை நோக்கி அழகாக அமைந்துள்ளன. இரு கைகளில் தாமரையும், அக்கமாலையும் ஏந்தியும், இருகைகள் வணக்கத்தைத் தெரிவிக்கும் நிலையிலும் காட்சியளிக்கின்றன. அமர்ந்த கோலத்தில் உள்ள இவ்வடிவம் அழகுடையது. பிரம்மனின் சிரம் கொய்தபின் அவர் வேண்டிட ஐம்முகங்களின் அழகை நான்முகங்களில் இறைவன் அருளிச் செய்ய பிரம்மன் பெற்றுப் பயனடைந்ததாக வரலாறு. தான் கண்டனம் செய்த அயனுக்கு இப்படி அழகிய சிலை வடிவில் தனது திருக்கோவிலிலேயே இடந்தந்து நல்ல பெயரும் வாங்கித் தருகிறார் கண்டியூர் வீரட்டேசுவரர். மேலும் மற்ற வீரடடதலங்களில் தனது வீரத்தை வெளிப்படுத்தும் திருவடிவங்களைக் கொண்டவர் இங்கு மட்டும் தனக்கு அத்தகைய வீரத்திருவடிவம் எதையும் கொள்ளவில்லை. பிரம்மன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம் இறைவன் திருமுன்னுக்கெதிரில் இடப்பால் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாக சிறிய சிலை வடிவமாக உள்ளது ஏனைய வீரட்ட தலங்களில் சம்கார மூர்த்தியின் செப்பு வடிவமும், அதற்கெனத் தனியான திருமுன்னும் உள்ளன. இங்கு தான் சம்கார மூர்த்தியின் செப்புத்திருமேனி இல்லை. மகாமண்டபத்தையொட்டி உள்ள அயனின் கலைத் தன்மை மிக்க வடிவம் காண்பதற்கு அரிது. கட்டான உடல் அமைப்புடன் உயிர்களைத் ததும்பும் இந்த கற்சிலை பெரிய அளவில் உள்ளது இது சோழர் கால எழிலார்ந்த கலைப் படைப்பாகும். இரண்டாவது திருச்சுற்றில் கீழ்ப்புறமாக உள்ள ஆணோடு பெண்ணாகிய பெம்மானின் வடிவம் காணவேண்டிய ஒன்றாகும். அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வடிவம் மிகச்சிறப்பானதாகும். சிவபெருமானின் ஊர்தியான காளையும் உட்கார்ந்த நிலையில் உள்ளது
விமானத்தில் இரண்டாம் தளத்தில் அரைத்தூண்களுக்கு அடியில் காணப்படும் நுணுக்கமான சிற்பங்களும், ஆடல் வல்லானின் பல்வேறு ஆடல் தோற்றங்களும் குறிப்பிடத்தக்கனவாகும். இவ்வாறான அமைப்பு அக்காலக் கலைப்பாணியில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவை சைவ-வைணவப் புராண நிகழ்ச்சிகளை விளக்குகின்றன.
பிரம்மதேவனின் தலையைக் கொய்த பாவம் நீங்க சிவபெருமான் மேற்கொண்ட தவக்கோல வடிவம் கருவறை விமானத்திற்கும், சண்டேசுவரர் திருமுன்னிற்கும் இடையே அழகாக அமைந்துள்ளது.
தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை