ஆலந்துறை நாதர் கோவில், திருப்புள்ளமங்கை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் ரயில்பாதையில் உள்ள பசுபதி கோயில் ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 3 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. ஐயம்பேட்டைக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
சுவாமி : பிரம்புரீசுவரர், பசுபதீசுவரர், ஆலந்துறை நாதர்,
அம்பிகை : அல்லியங்கோதை, சௌந்தர நாயகி
தீர்த்தம் : காவிரி, சிவதீர்த்தங்கள்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் பாற்கடலில் தோன்றிய நஞ்சை இறைவன் அமுது செய்த இடம் என சிறப்பு பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். ஊர் பெயர் பண்டைய நாளில் புள்ளமங்கை எனவும், கோயிற்பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்படுகின்றது. கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உள்ளன. இது புள்ளமங்கை என்பதைக் குறிக்கும் குறிப்பாகும். சக்கரப்பள்ளியின் ஏழிடங்களுள் இதுவும் ஒன்று. குடமுருட்டி ஆற்றகரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. ஆலமரத்தினை தலமரமாக கொண்டு விளங்கிய நீர்த்துறை ஆகவே ஆலந்துறை எனவும் வழங்கப்படுகிறது. கோயில் நவகிரகங்களுக்கு நடுவே நந்தி சிலை அமைந்துள்ளது. இத்தலத்தின் கல்வெட்டுகளில் ஆலந்துறை மகாதேவர் கோயில் என்று பொறிக்கப்பட்டுள்ளது. முதலாம் பராந்தக மன்னன் காலத்தில் கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. "பொந்தினிடைத் தேனூரிய" என்ற சம்பந்தர் பாடல் வரிகளுக்கேற்ப கோயில் சாளரத்தில் தேனடை உள்ளது.
இத்தலத்தில் உள்ள சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மன், லிங்கோற்பவர், நவக்கிரகங்கள், சண்டேசுவரர், நால்வர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள மகிஷாசுர மர்த்தினி தனிச் சிறப்புடைய சந்நிதி. கருங்கல் குடை நிழல் மீது, எருமை தலை மீது நின்று, சங்கு, சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடையம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும், சிங்கமும் இருக்க, இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவது போலவும், தொடையை கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சி தர, திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி மற்றவை அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்துணி விளங்க துர்காம்பிகை விளங்கும் கோலம் தனிச்சிறப்பாகும். திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை. இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.
இத்தலத்தில் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சி தருகிறார். திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
சோழர் காலச் சிற்பச் சிறப்புக்களுடைய இக்கோவிலுள்ள சிற்பங்கள் யாவும் பார்க்க வேண்டியவையாகும். அர்த்த மண்டபத் தூண்களில் அநேக சிற்பங்களைக் காணலாம். சோழ மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. அவ்வகை மாடக்கோவிலகளில் திருப்புள்ளமங்கை பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் பெரிய முன்மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் வடபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, நேர்பின்புறத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். நால்வர் சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவையும் இவ்வாலயத்தில் உள்ளன.
தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : ஐயம்பேட்டை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை