முல்லைவன நாதர் கோவில், திருக்கருகாவூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரயில்நிலையத்திலிருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் உள்ளது. கும்பகோணம் - மிலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.
சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவிவனேசுவரர்
அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை
தலமரம் : முல்லை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென் கரைத் தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன வேறு பெயர்களாகும்.
460 அடி நீளமும், 285 அடி அகலமும் உள்ள இக்கோவிலுக்கு கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரமும் தென் திசையில் மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது. கிழக்கு கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால உருவாக்கப்பட்ட ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் 3 நிலைகளை உடைய 2-ம் கோபுரம் வாயில் வரை நீண்ட மண்டபம் காணலாம். 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், இரட்டை நந்திகள் ஆகியவற்றைக் காணலாம். இங்கிருந்து உட்பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால் நாம் 63 மூவர் சந்நிதி, நால்வர் சந்நிதி, நிருதி விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானை உடனாய ஆறுமுகர் சந்நிதி மற்றும் மகாலட்சுமி சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். கருவறைக்குள் கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாகத் தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக் கொடிகளின் தழும்பு இருக்கக் காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் தீராத வியாதிகள் யாவும் தீர்ந்துவிடும். வெளியில் இருந்து கொண்டுவரும் புனுகு சுவாமிக்கு சாத்த அனுமதி இல்லை. தேவஸ்தானமே அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு புனுகு சாத்துகிறது.
சிவபெருமான் உமாதேவியுடனும் முருகனுடனும் இருக்கும் திருக்கோலம் சோமஸ்கந்தர் அருட்கோலம். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பு சில சிவாலயங்களில் தான் காணப்படுகிறது. இம்மூன்று சந்நிதிகளையும் ஒருசேர வலம் வர சுற்றுப் பிரகாரமும் உண்டு. இறைவியின் சந்நிதி சுவாமி சந்ந்நிதிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்து இறைவி கருகாத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கபடுகிறாள்.
தலபுராணம் : நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் வசித்து வந்தனர். ஒரு முறை நிருத்துவ முனிவர் ஒரு முக்கிய காரணமாக வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் மனைவி வேதிகை அப்போது கர்ப்பமுற்று இருந்தாள். அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை களைப்புற்று வீட்டில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். ஊர்த்துவ முனிவர் என்ற மற்றொரு தவசீலர் இவ்வழியாக சென்றுகொண்டிருந்தார். களைப்புடன் இருந்த அவர் வீட்டில் இருப்பவர்களால் தண்ணீரும், உணவும் கிடைக்கும் என்று குரல் கொடுத்தார். ஆனால் யாரும் வெளியில் வராது கண்டு உள்ளே எட்டிப்பார்க்க வேதிகை படுத்து உறங்கக் கண்டார். வேதிகை கர்ப்பமுற்ற களைப்பால் உறங்குவதை அறியாத அவர் கோபம் கொண்டு சபித்துவிட்டு சென்று விட்டார். முனிவரின் கோபத்திற்கு ஆளாகி விட்ட அச்சத்தில் அவள் முல்லைவனநாதரையும், இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள். இறைவியும் வேதிகை பக்திக்கு இணங்கி அவளது கருகாத்து அருள்புரிந்தார். இத்தலத்திற்கு திரும்பிய நிருத்துவ முனிவர் பெண்கள் யாவருக்கும் சுகப்பிரசவம் ஆகும்படியும் அவர்கள் கருவை காத்து அருள்புரியும்படியும் வரம் வேண்டினார். அவ்வாறே இறைவியும் வரம் அளித்து அருள் புரிந்தர். இதனால் இத்தலத்து இறைவி 'கருகாத்தநாயகி' என்றும், 'கர்ப்பரட்சாம்பிகை' என்றும் தலத்திற்கு 'கருகாவூர்' என்றும் வழங்கப்படுகிறது.
இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.
தினந்தோறும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பாபநாசம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை