கும்பேஸ்வரர் கோவில், திருக்குடமூக்கு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே உள்ளது. பல முக்கிய நகரங்களிலிருந்தும் இத்தலத்திற்கு பேருந்து வசதி உள்ளது
சுவாமி : கும்பேசுவரர், அமுதேசுவரர்
அம்பிகை : மங்களாம்பிகை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : மகாமகம், காவிரி
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: தஞ்சை மாவட்டத்தின் மிகப்பெரிய கோயிலாக இத்தலம் விளங்குகிறது. குடமூக்கு என்பது கும்பகோணம் என வழங்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள மூலவர் 'பிருதிவி' வடிவில் விளங்குகிறார். உச்சி, குடமூக்கு போன்று உள்ளது.
சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதி தனியாகக் கிழக்கு நோக்கி உள்ளது. இங்கு விநாயகர், முருகர், லட்சுமிநாராயண பெருமாள், நவக்கிரகம், அறுபத்து மூவர், சட்டைநாதர், வீரபத்திரர், அஷ்டலிங்கங்கள், சப்தகன்னியர், மகாலிங்கேசுவரர், பிட்சாடனர், சிவலிங்க மூர்த்தங்கள், அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, அம்பாள் சந்நிதியை அடுத்து அமுத குடத்தை வில்லால் அடித்துச் சிதறச் செய்த கிராதர் கோலத்தில் இறைவன், பைரவர், ஜுரஹரேசுவரர், சாஸ்தா, சூரியன், சந்திரன், நடராஜர் முதலிய சந்நிதிகள் உள்ளன. மண்டபத்தின் இடபால் திருவெழுக்கூற்றிருக்கை தேர் வடிவில் வண்ணச் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது
திருத்தல வரலாற்றின்படி :
1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம்
2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம்
3. அமுதகும்பத்தில் சாத்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம்
4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம்
5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் அடித்து சிதறியபோது அதன்மீதிருந்த பூணுல் சிதறிய இடம் -
கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.
தலவரலாறு : உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அக்குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஒரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் சென்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது ஒரு அம்பை செலுத்தி குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம் மணல் இவற்றால் உருவான இவர் 'ஆதிகும்பேஸ்வரர்' என்ற பெயரில் இவ்விடத்தில் காட்சி அளிக்கிறார்.
கோயில் அமைப்பு: ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று ராஜகோபுரங்களுடன், மூன்று பிரகாரங்களையும் உடையது. கிழக்கிலுள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரமுடையதாகும். இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன குடவடிவம் உடையவர் என்பதால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. பாணத்தின் உச்சி கும்பத்தின் வாயைப் போல உள்ளது. பெளர்ணமி நாட்களில் மட்டும் புணுகு சாத்தி வழிபாடு செய்யப்படும். கொடிக் கம்பத்திற்கருகில் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் சந்நிதி உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள சித்திர நடன மண்டபமும், அதிலுள்ள சிற்ப வேலைப்பாடுகளும் பார்க்கவேண்டிய ஒன்றாகும்.
மகாமகக் குளம் : கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க, மாசி மாதத்தில் பெளர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடியிருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாடப்படுகிறது. 'காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும். கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும்' என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர் கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர் என்று ஐதீகம். இந்த மகாமகக்குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளுடனும் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.
மகாமகதீர்த்தக் கரையில் சுற்றிலும் பிரம்மதீர்த்தேசம் முகுந்தேசம் தனேசம் ரிஷபேசம் பாணேசம் கோனேசம் பக்தேசம் பைரவேசம் அகத்தீசம் வியாகேசம் கங்காதரேசம் பிரமேசம் முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் உள்ளன. இந்நகரிலுள்ள 14 தீர்த்தங்களில் 7 தடாகங்களும், 4 காவிரித்துறைகளும், 3 கிணறுகளும் அடங்கும்.
இங்கு காலையில் முதலில் சூரியனுக்கும், மாலையில் சந்திரனுக்கும் வழிபாடுகள் நடக்கின்றன. கும்பேசரின் ஏழிடத்திருவிழாவூர்கள் பின்வருமாறு : 1. கும்பகோணம் 2. கலயநல்லூர் 3. வலஞ்சுழி 4. தாராசுரம் 5. சுவாமிமலை 6 கொட்டையூர் 7. மேலைக் காவிரி.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு