ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குரங்காடுதுறை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது ஆடுதுறை என வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. திருவிடைமருதூருக்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுவாமி : ஆபத்சகாயேசுவரர்
அம்பிகை : பவளக் கொடியம்மை
தீர்த்தம் : சகாய தீர்த்தம்
தலமரம் : வாழை
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: ஆனுமாரும், வாலியின் தம்பியாகிய சுக்ரீவன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
சோழமன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் கோபுரம் 3 நிலைகளுடன், 2 பிரகாரங்கள் கொண்டு கிழக்கு நோக்கி உள்ளது. மண்டபத்தில் மேலே முகப்பில் சுக்ரீவன் பெருமானை வழிபடுவதும், பக்கத்தில் விரிஷிபாரூடராய்க் காட்சி தருவதும் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இத்தலத்தில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டுள்ளார் என்று புராண வரலாறு கூறுகிறது. இத்திருத்தலத்தில் விநாயகர், முருகர், நால்வர், விசுவநாதர், கஜலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், நவக்கிரகம், சனீசுவரன், சுக்ரீவன், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை, முதலிய சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள துர்க்கைக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் எதிரில் எழுந்தருளியுள்ள பிள்ளையாரையும் தரிசிக்கலாம்.
அடுத்துள்ள மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். இறைவன் ஆபத்சகாயேஸ்வரரின் சந்நிதி இரண்டாவது உள் பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.
கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவைவ உள்ளன. வடக்கு நோக்கிய சந்நிதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியும், அருகில் கங்கா விசர்சன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றன. அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது.
அம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம் வரும்போது பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூசை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.
இத்தலத்தின் தலவிருட்சமாக பவளமல்லிகை மரமும், தீர்த்தங்களாக சகாய தீர்த்தம் மற்றும் கோவிலுக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தம் ஆகியவையாகும். சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது படுகின்றன. சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபட்டால் தந்தை மகன் உறவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும், தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
தினந்தோறும் காலை 7.30 முதல்12.00 மணி வரையிலும் மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : ஆடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை