வைகல் நாதர் கோவில், திருவைகல் மாடக்கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் பழியஞ்சியநல்லூரை அடைந்து மேலும் 2 கி.மீ அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். 'வைகல்' என்னும் இடத்திற்குத் தென்மேற்கே சற்று தொலைவில் 'மாடக்கோயில்' இருக்கின்றது.
சுவாமி : வைகநாதர்
அம்பிகை : கொம்பிலிளங்கோதை, வைகன் நாயகி
தலமரம் : சண்பகம் (தற்போது இல்லை)
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் இலக்குமி வழிபட்ட தலம். இத்திருக்கோவில் கோச்செங்கட் சோழ மன்னனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்று. இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன. 1. விசுவநாதர் ஆலயம் - வளநகர் என்று வழங்கப்படுகிறது. 2. பிரம்மபுரீசுவரர் ஆலயம் - பிரம்மன் வழிபட்டது. வைகல்நாதர் ஆலயம் - மாடக்கோயில். சண்பகாரண்யம், நித்தியவாசபுரம் முதலியன இத்தலத்தின் வேறு பெயர்கள். இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அழகான பாணம்.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சணபகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவிலகளையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது. மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன. காகவாகனர் சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது.
கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.
தினந்தோறும் காலை 6.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : ஆடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை