வேதபுரீஸ்வரர் கோவில், திருவழுந்தூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் ரயில்நிலையத்திலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது 'தேரழுந்தூர்' என்று வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் வந்து கோமல் ரோட்டில் திரும்பிச் சென்றால் மூவலூரை அடுத்துள்ள ஊருக்குக் கிழக்கே உள்ள கீழையூர் என்னும் இடத்தில் இக்கோயில் உள்ளது.
சுவாமி : வேதபுரீசுவரர், அத்யாபகேசர்
அம்பிகை : சௌந்தராம்பிகை
தலமரம் : சந்தனம்
தீர்த்தம் : வேதாமிர்த தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது. ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது.
5 நிலை ராஜகோபுரம் மேற்கில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோபுரம் தாண்டி உள்ளே சென்றவுடன் விசாலமான இடம். வெளிப் பிரகாரம் சுற்றி வர முடியும். உள் வாயில் அருகே கொடிமரத்தையும், கொடிமர மாடத்து விநாயகரையும் நாம் காணலாம். உள் வாயில் கடந்து உள்ளே சென்றால் இருப்பது இரண்டாவது பிரகாரம். கருவறையில் வேதபுரீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் வடமேற்கு மூலையில் மற்றொரு சிறிய கோவிலில் ஸ்ரீமடேஸ்வரர் சந்நிதி உள்ளது. அம்பாள் திருநாமம் ஸ்ரீமடேஸ்வரி. இதுதான் ஆதி கோவில் என்றும், வேதபுரீஸ்வரர் சந்நிதி இதற்குப் பின்னரே தோன்றியதென்று கூறுகிறார்கள். உட்பிரகாரத்தில் வலம் வரும்போது வடமேற்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளன. பக்கத்தில் காவேரி அம்மன், அடுத்து சூரியன், காலபைரவர் முதலியவர்களும் இருக்கின்றனர். இங்கு அகத்தியர், மார்க்கண்டேயர், காவேரி ஆகியோர் இறைவனை வழிபட்டு மோட்சம் அடைந்துள்ளனர். இங்கு விநாயகர், முருகர், நவக்கிரகம், க்ஷேத்திரலிங்கம், கடம்பனேசுவரர் முதலான சிவலிங்க மூர்த்தங்கள், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன. இங்கு 'மடேசுவரர்' ஆலயம் தனியாக உள்ளது.
கிழக்குப் பிரகாரத்தில் தல விருட்சமான சந்தன மரம் இருக்கிறது. இம்மரத்தினடியில் தான் சிவபெருமான் அந்தணர்களுக்கு வேதம் பயிற்றுவித்ததாக தலபுராணம் கூறுகிறது. அதன் அடையாளமாக பக்கத்தில் ஷேத்திர லிங்கத்தையும், நந்தியையும் காணலாம். தென் பிரகாரத்தில் கிழக்கே நோக்கியபடி உள்ள வலஞ்சுழி விநாயகர் சந்நிதி உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் தான் தென்மேற்குப் பகுதியில் ஸ்ரீமடேஸ்ரர் சந்நிதிக்கு எதிரில் இறைவி சௌந்தராம்பிகையின் சந்நிதி கிழக்கு நோக்கி சிவன் சந்நிதியை நோக்கி தனிக் கோவிலாகவே அமைந்துள்ளது.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : குத்தாலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை