நற்றுணையப்பர் கோவில், திருநனிபள்ளி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் செம்பொனார்கோயில் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது புஞ்சை என வழங்கப்படுகிறது.
சுவாமி : நற்றுணையப்பர்
அம்பிகை : பர்வதபுத்திரி, மலையான் மடந்தை
தீர்த்தம் : சொர்ண தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் திருஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் அவதாரத்தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
இறைவன் கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கியது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கோயில். இத்தலம் முன்பு பாலை நிலமாக இருந்தது. பின் பாலையை நெய்தலாகவும், பின்னர் மருத நிலப் பகுதியாகவும் திருஞான சம்பந்தர் விளங்கச் செய்த பதி. இது நம்பியாண்டார் நம்பி பாடிய 'ஆளுடைய பிள்ளையார் திருவுலமாலையாலும்' 'திருக்ளிற்றுப்படியாராலும்' அறியலாம். இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய பதி. இத்தலத்தில் விநாயகர், முருகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை, நால்வர், சூரியன், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.
தல வரலாறு: திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான அருளால் பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற "காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாறியது.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : செம்பொனார்கோயில்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை