வலம்புரிநாதர் கோவில், திருவலம்புரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 14 கி..மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது மேலப்பெரும்பள்ளம் என வழங்கப்படுகிறது. சீர்காழி - காவிரிப்பூம்பட்டினம் பேருந்தில் மேலையூர் சென்று அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : வலம்புரநாதர்
அம்பிகை : வடுவகிர்க்கண்ணி
தலமரம் : பனை
தீர்த்தம் : பிரம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுவர்ண பங்கஜ தீர்த்தம்
பதிகம : திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இது ஒரு மாடக் கோயில். திருமால் வழிபட்டு வலம்புரிச்சங்கினை பெற்ற தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். காவிரிக்கு வலப்புறம் உள்ளதால் திருவலம்புரம் எனப்பட்டது. ஏரண்ட முனிவர் திருவலஞ்சுழியில் காவிரியில் மூழ்கி இங்குக் கரையேறியதாகக் கூறப்படுகிறது. இங்கு அவருக்கு கோயில் உள்ளது. மூலவர் பிரித்விலிங்கம் திருமுடியில் பள்ளம் உள்ளது. குவளைசாத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தலத்தில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், முருகர், சூரியன், விசுவநாதர், நால்வர், இராமநாதர், கஜலட்சுமி, பிட்சாடணர் நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோவில் அமைப்பு: இத்தலம் ஒரு மாடக் கோவிலாகும். கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் விற்றிருக்கின்றார். அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட இலிங்கமும் உள்ளன. இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தம் மிகச் சிறப்பாக உள்ளது. கருவறை சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. நடராசர் சபையும் மகாமண்டபத்தில் உள்ளது. ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை உள்ளன. தல விருட்சமாக ஆண்பனை விளங்குகிறது.
தல வரலாறு: மகத நாட்டு மன்னன் தனஞ்செயன் என்பவன் தனது மகனிடம், "நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு எனது அஸ்தியை கரைத்து விடு," என்ற கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக மாறியதைக் கண்டு அஸதியை இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் கரைத்தான். அந்த மன்னனின் சிலை இத்தலத்தில் உள்ளது. எனவே இத்தலம் காசியை விட புனிதமானது என்று புராணங்கள் கூறுகிறது.
அரசன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாக அமைச்சர் மூலம் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. பழி நீங்க சான்றோர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்களும் நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் அதில் எவரேனும் மகான் "ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும், அப்போது பழிதீரும்" என்று மன்னனுக்குச் சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி, "அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்" 'என கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வர, பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. பட்டினத்தாரை மன்னன் சென்று வரவேற்கும் ஐதீக திருவிழா இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
தினந்தோறும் காலை 8.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை