சங்காரண்யேஸ்வரர் கோவில், திருதலைச்சங்காடு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆக்கூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள தலம். மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாக பூம்புகார் சென்று இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : சங்கவனேசுவரர், சங்காரண்யேசுவரர், சங்கருணாதேசுவரர்
அம்பிகை : சௌந்தர நாயகி
தலமரம் : புரசு
தீர்த்தம் : சங்கு தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருமால் வழிபட்டுப் 'பாஞ்சசந்நியம்' என்னும் சங்கைப் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். மூலவர் சங்கு போன்ற உருண்டை வடிவில் காட்சி தருகிறார். இவ்வூரில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற நாண்மதியப் பெருமாள் என்னும் வைணவத்தலம் உள்ளது. இங்கு விநாயகர். முருகர். திருமால். பூதேவி. ஸ்ரீதேவி. நடராஜர். நால்வர். சுரகரேசுவரர். பட்டினத்தார். அகத்தியர். காவிரி அன்னை முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலம் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெருமை வாய்ந்தது.
கோச்செங்கட் சோழனால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோவில்களில் திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம். பலிபீடத்தின் பின்னால் சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியே படிகளேறி இறைவன் சந்நிதி உள்ள முன் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் சங்காரண்யேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். மூலவர் சங்காரண்யேஸ்வரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம். கருவறை சுற்றில் ஸ்ரீசண்டிகேஸவரர், மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை மற்றும் தேவார நால்வர் உருவச் சிலைகளைக் காணலாம்.
தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேஸ்வரரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி சந்நிதி அமைந்துள்ளது.
கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம். இத்தலத்தின் தல விருட்சம் புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம், மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : ஆக்கூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை