தான்தோன்றியப்பர் கோவில், திருஆக்கூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆக்கூர் ரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. ஊர் பெயர் ஆக்கூர். கோயில் பெயர் தான் தோன்றி மடம். சீர்காழியிலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.
சுவாமி : தான் தோன்றியப்பர், சுயம்புநாதர்
அம்பிகை : வாள்நெடுங்கண்ணி, கடக நேத்திரி
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: 63 நாயன்மார்களுள் சிறப்புலி நாயனார் அவதாரத்தலம். அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். சம்பந்தப் பெருமானால் இத்திருவூரில் தாளாண்மைமிக்க சைவ வேளாளர்கள் சிறப்பிக்கப் பெற்றுள்ளனர்.
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திறகு கிழக்கில் 3 நிலை இராஜ கோபுரமும் தெற்கில் ஒரு நுழைவாயிலும் உள்ளன. கோபுர வாயிலில் விநாயகர் காட்சி தருகிறார். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து நேரே சென்றால் நாம் இருப்பது கிழக்கு வெளிப் பிரகாரத்தில். நேரே கிழக்கு நோக்கி உயரமான மாடத்தில் இறைவன் கருவறை உள்ளது. படிகள் ஏறிச் சென்றால் பலிபீடத்தையும், நந்தியையும் நாம் தரிசிக்கலாம். இங்கு குடிகொண்டுள்ள தான்தோன்றியப்பர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார். அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்றானதால் இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்திருக்கிறது. உள் சுற்றில் விநாயகர், முருகர், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும், சுந்தரர் அவரது இரு மனைவியர் சங்கிலி நாச்சியார் மற்றும் பரவை நாச்சியார் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும் காணப்படுகின்றன. அடுத்து காலபைரவர், பைரவர், சூரியன் ஆகியோரின் திருஉருவச் சிலைகள் உள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்த தலம் ஆக்கூர். கருவறை அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் சிறப்புலி நாயனார் சந்நிதியும் அவருக்கு நேர் எதிரே வலதுபுறம் ஆயிரத்தில் ஒருவர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்திறகுரிய சிறப்பு மூர்த்தி இந்த ஆயிரத்தில் ஒருவர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் மயில் மீது கிழக்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். அருகே தேவியர் இருவரும் எழுந்தருளியுள்ளனர். இத்தலம் கோச் செங்கட் சோழன் தனது முற்பிறவியில் யானையால் ஏற்பட்ட இடர் காரணமாக யானை ஏறமுடியாத மாடக்கோவில்கள் 70 கட்டினார் அவர் கட்டிய 70 மாடக்கோவில்களுள் இதுவும் ஒன்று.
மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி தினமும் 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய முற்பட்டான். 48 நாட்கள் இந்த அன்னதானம் செய்ய வேண்டியிருந்தது. தினந்தோறும் 1000 இலை போட்டு உணவு பரிமாறினாலும் 999 பேர் மட்டுமே உணவருந்தினர். 47 நாட்கள் இவ்வாறு தினமும் ஒருவர் குறைவதைக் கண்ட மன்னன் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டான். 48-வது நாள் அந்தணர் உருவில் ஆயிரத்தில் ஒருவராக தானும் வந்து உணவருந்தி அமன்னனுக்கு அருள் புரிந்தார். பந்தியில் தானும் ஒருவராக அமர்ந்து இறைவன் உணவருந்திய பெருமையை உடையது இத்தலம்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : ஆக்கூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை