பார்வதீஸ்வரர் கோவில், திருதெளிச்சேரி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் பாண்டிச்சேரி மாநிலத்தில் காரைக்கால் கோயிற்பத்து ரயில் நிலையத்தின் அருகே உள்ள இத்தலம் காரைக்கால் நகரில் உள்ள ஒரு பகுதி. இதற்கு சமீவனம் என்று பெயர்.
சுவாமி : பார்வதீசுவரர், பார்ப்பதீசுவரர், சமீவனேசுவரர்
அம்பிகை : பார்வதியம்மை, சத்தியம்மை, சுயம்வரதபஸ்வினி
தலமரம் : வில்வம், வன்னி
தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, குகத் தீர்த்தம், தவத் தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இது மேற்கு நோக்கிய கோயில். இங்குள்ள மூர்த்தி பிரம்மன் வழிபட்டதால் பிரம்மலிங்கம், மகாலிங்கம் எனவும், அம்பரீஷனால் வழிபட்டதால் ராஜலிங்கம் எனவும், சூரியனால் வழிபட்டதால் பாஸ்கரலிங்கம் எனவும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
இத்தலத்திற்கு பிரம்மவனம், முக்திவனம் என்னும் பெயர்களும் உண்டு. இங்கு பிரதான மூர்த்தி கிராத (வேட) மூர்த்தியாகும். காரைக்கால் அம்மையார் கோயில் தனியாக வேறு இடத்தில் உள்ளது. இங்கு விநாயகர், முருகர், லட்சுமி, துர்க்கை, சூரியன், சனீசுவரர், பைரவர், வன்னிலிங்கம், தட்சிணாமூர்த்தி, அறுபத்துமூவர், நடராஜர் சபை, லிங்கோற்பவர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பங்குனி மாதம் 13 முதல் பத்து நாட்களுக்கும் கதிரவன் கதிர்கள் இறைவன் திருமேனியில் விழுகின்றன.
கோவில் அமைப்பு: ஐந்து நிலைகள் கொண்ட மேற்கு நோக்கிய பெரிய ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்தில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள முன் மண்டபத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், அதன் அருகே கொடிமர விநாயகர் காணலாம். கருவறை முக மண்டபத்தில் அம்பாள் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகியர் காணப்படுகின்றனர். இறைவன் பார்வதீஸ்வரர் கருவறையில் லிங்க உருவில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர், இறைவனை நோக்கி நந்தியெம் பெருமான் ஆகியோரும் உள்ளனர். கருவறைச் சுற்றில் 63மூவர், நர்த்தன கணபதி, சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் உள்ளனர். கருவறை கிழக்குச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளது. கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, ஆகியோரைக் காணலாம், சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி இங்குள்ளது குறிப்பிடத் தக்கது.
இத்தலத்தில் சூரியபுஷ்கரணி, குகதீர்த்தம், தவத்தீர்த்தம் ஆகய மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் சீரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய புஷ்கரணி சிறந்ததாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் வைகறையில் இத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
இவ்வூர்க்கு அண்மையில் போதிமங்கை என்னும் ஊர் உள்ளது. அவ்வூர் புத்தர்கள் வசிக்கப்பெற்றது. அதன் வழியாக ஞானசம்பந்தர் திருக்கூட்டம் "பரசமய நிராகரித்து நீறாக்கி" வந்தார் என்று முத்துச் சின்னங்களை ஊதிச் சென்றது. அதை பொறுக்காத புத்தர்கள் தடுத்தனர். அப்பொழுது தேவார திருமுறை எழுதும் சம்பந்தர் "புத்தர் சமண்கழுக்கையர்" என்று தொடங்கும் பதிகத்தை ஓத புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடிவிழுந்து அவன் உடனே இறந்து போனான். பின் சாரிபுத்தன் என்பவன் வந்து சொற்போர் புரிந்து தேல்வியுற்று சைவனாயினார். பின் அவனைச் சார்ந்தோரும் சைவனாயினர்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : காரைக்கால்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை