பாம்பு புரேஸ்வரர் கோவில், திருபாம்புரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பேரளத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணம்-காரைக்கால் சாலை மார்க்கத்தில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ சென்று இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : பாம்புரேசுவரர், பாம்பீசர், சேஷபுரீசுவரர், பாம்புரநாதர்
அம்பிகை : பிரமராம்பிகை, வண்டார் குழலி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்
வழிபட்டோர் : இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி , அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் எட்டு மகா நாகங்களான அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். உரகபுரம், சேஷபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள் ஆகும். இத்தலத்தில் நாகராஜருக்கு மூல, உற்சவ விக்ரகங்கள் உண்டு.
இத்தலம் ஆதிசேஷன் வழிபட்ட தலம். ஆதிசேஷன் மகா சிவராத்திரியன்று முதற் காலத்தில் குடந்தை நாகேசுவரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் காலத்தில் இத்தலத்தில் உள்ள பாம்புரநாதரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேசுவரரையும் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாகச் சிறப்பிக்கப்படுகிறது. தோஷ நிவர்த்திக்காகவும், புத்திரப் பேற்றுக்காகவும் இத்திருத்தலம் பிரசித்திப் பெற்றது. இங்கு திருமலையீசுவரர் சந்நிதி உயரத்தில் தனிக் கோயிலாக உள்ளது. இங்கு நின்று பார்த்தால் திருவீழிமிழலையின் திருக்கோயில் கோபுரம் தெரியும். சட்டநாதர் தரிசனம் சிறப்புடையது. இத்தலம் ஒரு ராகு-கேது நிவர்த்தி ஸ்தலம். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தல புராணம். ராகுவும், கேதுவும் ஏக சரீரியாக, அதவாது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் முதலாவதாகும்.
தல புராணம் : கைலாயத்தில் ஒரு விநாயகர் சிவபெருமானை வணங்கும் போது, அவருடைய கழுத்தில் இருந்த பாம்பும் தன்னை விநாயகர் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டன. இதனால் கோபம் கொண்ட ஈசன் நாக இனங்கள் அனைத்தும் தனது சக்திகளை இழக்கும்படி செய்தார். இதனால் உலகை தாங்கும் ஆதிசேடன், ராகு கேது மற்ற நாக இனங்களும் தங்களது சக்திகளை இழந்து துன்பம் அடைந்தது. அனைத்து நாகங்களும் சாபவிமோசனம் வேண்டி இறைவனை துதிக்க இறைவன் மனமிரங்கி ஷேசபுரி எனப்படும் இத்தலத்தில் சிவராத்திரி அன்று தம்மை தொழுதால் சாபவிமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரியன்று முதல் சாமத்தில் கும்பகோணம் நாகநாதரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் நாகநாதரையும், நான்காம் சாமத்தில் திருநாகூர் நாகநாதரையும் வணங்கி சாபவிமோசனம் பெற்றன.
கோயில் அமைப்பு : இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாகதோஷங்கள் நீங்கி விடுகின்றன. மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும், மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும், அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதி மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜவிநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். இக்கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்தின் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது. ஆதிஷேடன் வழிபட்ட தலம். ஆதலால் இங்கு கோயில் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும், அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். 'விஷம் தீண்டாப் பதி' என்ற சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. சரபோஜி மன்னனின் பிரதிநிதி சுபேதரர் ரகுபாண்டியதராயன் என்பவனால் வசந்தமண்டபமொன்று கட்டப்பட்டதாக கல்வெட்டின் மூலம் தெரிகிறது.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பேரளம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை