சிவானந்தேஸ்வரர் கோவில், திருப்பேணுப்பெருந்துறை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ரயில்நிலையத்திலிருந்து தென்கிழக்கே 9 கி.மீ தொலைவில் உள்ள இத்திருவூர் தற்போது 'திருப்பந்துறை' என்று வழங்கப்படுகிறது. நாச்சியார் கோயிலுக்கு வடகிழக்கே எரவாஞ்சேரி பாதையில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுவாமி : சிவானந்தேசுவரர், பிரணவேசுவரர்
அம்பிகை : மங்களாம்பிகை, மலையரசி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் விநாயகர், முருகப்பெருமான், உமையம்மை, பிரம்மன் முதலியோர் பூசித்துப் பேறு பெற்றனர். இத்தலம் முருகப் பெருமானின் ஊமை தன்மை நீங்கிய தலம். இங்குத் தீர்த்தக் கரையில் குக விநாயகர், சாட்சி விநாயகர் என்னும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், முருகர், நால்வர், கஜலட்சுமி, நவக்கிரகம், தண்டபாணி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. எதிரில் மங்கள தீர்த்தம் இருக்கிறது. அதன் கரையில் கோவிலை ஒட்டி இரட்டை விநாயகர் சந்நிதகள் உள்ளன. இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. ஆலயத்திலுள்ள பிட்சாடனர் உருவச்சிலையும் மிகச் சிறப்பானது. அம்பாள் மங்களாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவ்வாலயத்தின் தலமரம் வன்னி. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.
தல வரலாறு: பிரணவ மந்திரத்திறகு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். பின்னர் முருகனை மனக்கவலை பற்றிக் கொண்டது. வயதில் சிறியவனான தான் பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்து விட்டோமே என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க தனது மாமனான மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார். அதன்படி முருகர் திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூட ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காவிரியின் கிளைநதியான அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.
எனவே இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனை பேச வைத்த தலமாகவும் திகழ்ந்து பேசும் சகதியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையை தீக்கும் தலமாகவும், வாக்கு வண்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை