சித்த நாதேஸ்வரர் கோவில், திருநறையூர் சித்தீச்சரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ரயில்நிலையத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோயில் சாலை வந்து நாச்சியார்கோயிலின் முற்பகுதியாகிய திருநறையூரில் இறங்கி கோயிலை அடையலாம். ஊர் பெயர் நறையூர். கோயில் பெயர் சித்தீச்சரம்.
சுவாமி : சித்தநாதர், சித்தநாதேசுவரர், வேதேசுவரர், நரேசுவரர்
அம்பிகை : அழகம்மை, சௌந்தர நாயகி
தலமரம் : பவள மல்லிகை
தீர்த்தம் : சூல தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 3
சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் சித்தர்கள் பூசித்துப் பேறு பெற்றதால் 'சித்தீச்சரம்' எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
இத்திருத்தலத்தில்தான் பிரம்மன் குபேரன் துர்வாச முனிவரால் பறவை உருவமாக சாபம் பெற்ற நரன், முருகப் பெருமான் முதலியோர் பூசித்தனர். மேலும் மேதாவி முனிவர் பூசித்து, இலக்குமியைப் புதல்வியாகப் பெற்று, திருமாலுக்கு மணம் செய்து கொடுத்த தலம். நரபுரம், குபேரபுரம், பிரம்மபுரம், சுகந்தவனம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். இத்தலம் மேற்கு நோக்கிய பெரிய கோயில். இங்கு ஆண்ட விநாயகர், முருகர், நவக்கிரகம், நடராஜர்சபை, பைரவர், வீரபைரவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், அர்த்தநாரீசுவரர், பிட்சாடணர், துர்க்கை, நால்வர், சப்தமாதர்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள பிச்சைப்பெருமான் திருவுருவம் மிக்க அழகு வாய்ந்தது.
கோவில் அமைப்பு: சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஆலயத்தில் இறைவன் கருவறையில் லிங்க உருவில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒரு தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்கு திசையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சந்நிதி உள்ளது. ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை. கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது. பிரகாரத்தில் ஒரே சந்நிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும். மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. இறைவி சௌந்தர நாயகி அம்பாள் தனி சந்நிதியில் காட்சி தருகிறாள். குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது. மாசி மாதத்தில் மூன்று நாட்களும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.
தல வரலாறு: மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது. மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை