சிவபுரநாதர் கோவில், சிவபுரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் உள்ள சாக்கோட்டை என்ற இடத்திலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் வடகிழக்கே 2 கி.மீ. தொலைவில் அரசிலாற்றின் தென்கரையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : சிவபுரநாதர், சிவபுரீசுவரர், சிவகுருநாதசுவாமி, பிரமபுரீசுவரர்
அம்பிகை : சிங்காரவல்லி, பெரிய நாயகி, ஆரியாம்பாள்
தலமரம் : செண்பகம்
தீர்த்தம் : சுந்தர தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 3
திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் பூமிக்கு அடியில் அடிக்கு ஒரு சிவலிங்கம் உள்ளதாக ஐதீகம். இதனால் ஞானசம்பந்தர், அப்பர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல் அங்கப்பிரட்சணம் செய்து சுவாமியை தரிசித்து பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெம்மானை பாடியதாக வரலாறு. சிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும். சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.
இத்திருத்தலத்தில் திருமால் வெள்ளைப் பன்றி உருவத்தில் பூசித்துப் பேறு பெற்றார் என்பது சிறப்பு. இதற்கு பூகயிலாயம், குபேரபுரம், சண்பகாரண்யம் என்னும் வேறு பெயர்கள் உண்டு. இத்தலத்தில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள நடராஜர் மூர்த்தம் தனிச் சிறப்புடையது. இங்கு விநாயகர், முருகர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை, நால்வர், பரவையார் முதலிய சந்நிதிகள் உள்ளன. மூலவரின் திருமேனி கம்பிரமான பெரிய சிவலிங்கத்திருமேனி. விஷணு பூசித்தது.
கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜ கோபுரத்தையும், 2 பிரகாரங்களை உடையதாகவும் அமைந்துள்ளது. இராஜ கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள இரண்டாவது பிரகாரத்தில் கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் காணலாம். இந்த பிரகாரத்தின் வலதுபுறம் பைரவர் சந்நிதி தெற்கு நோக்கி மைந்துள்ளது. 3 நிலை உள்ள 2-வது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் முதல் பிரகாரம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. எதிரே முன் மண்டபம், அதன் பின் இறைவன் கருவறையில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவர் கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி, இவர் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது. கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண் பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.
இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டது. பின்பு அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்புக் கருதி, இப்போது திருவாரூர்ச் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராசத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபட்டு வரப்பெறுகின்றது. நடராசப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் சந்நிதியில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.
வெளிப் பிரகாரத்தில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு காலைசந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி, தயிர்சாதமும் கடலையுருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால், வழக்குகளில் வெற்றி, தீராத நோய் தீரும் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இத்தலத்தில் கார்த்திகை மாதம் கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒரு முறை நந்தியெம்பெருமானின் சாபத்திற்கு உள்ளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும்.
குபேரன் சாபம் நீங்கிய வரலாறு : ஒருமுறை ராவணன் தூய்மையற்றவனாய் இறைவனை வழிபட வந்தபொழுது நந்தி அவரை தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காக பரிந்து பேச, நந்தி சாபமளித்தார். குபேரன் தளபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாக இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் வடக்கு பிரகாரத்தில் கோமுகம் அருகில் காணப்பட்ட செப்புப் பட்டையத்தில் இருந்த சுலோகத்தை படித்தார். மாசி மாதத்தில் சிவராத்திரி, சோமவாரம், பிரதோஷம் இவை மூன்றும் சேர்ந்து வரும் நாளில் உடற்குறையில்லாத ஆண்குழந்தையை பெற்றோர் பிடிக்க அரிந்து, ரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று அறிந்தார். அவ்வாறே வறுமையால் வாடிய தம்பதிகளுக்கு பொருள் தந்து அவர்களை சம்மதிக்க வைத்து வாள் கொண்டு அரியும் போது, குழந்தை அன்னை சிங்காரவல்லியை வேண்டிட, அத்தாயும் இறைவனிடம் வேண்டினாள். இறைவனும் மகிழ்ந்து தளபதியின் சாபம் நீங்கவே இவ்வாறு நேர்ந்ததாக அருளி தளபதியை குபேரனாக்கினார். இதை நினைவூட்டும் வகையில் பெருமானின் முடியில் ரத்தத்துளி போன்று இருப்பதை காணலாம்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை