அமிர்தகலசநாதர் கோவில், திருக்கலயநல்லூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது 'சாக்கோட்டை' என்று வழங்கப்படுகிறது.
சுவாமி : அமிர்தகலசநாதர், அமிர்தகலேசுவரர்
அம்பிகை : அமிர்தவல்லி
தலமரம் : வன்னி
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் சுவாமி அம்பிகையைத் திருமணம் புரிந்த தலம். பிரம்மன் பூசித்துப் பேறு பெற்ற தலம். சுந்தரர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
இத்தலம் கோட்டைச் சிவன் கோயில் எனப்படும். ஞானசம்பந்தர் இத்தலத்தில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்வதாக குறிப்பிட்டுள்ளதால் சாக்கியர் கோட்டை - சாக்கோட்டை ஆயிற்று. இங்குள்ள தட்சிணாமூர்த்தி தனித்தன்மையுடைய மூர்த்தியாகும். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்குத் தங்கியதால் 'கலயநல்லூர்' என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகின்றது.
இத்தலத்தில் கோயிலுக்கு முன்னும் பின்னும் இரண்டு அகழிகள் உள்ளன. இதனால் பண்டைய நாளில் இது சோழ மன்னர்களின் முக்கிய இடமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் ஒரே கல்லில் அமைந்துள்ளது. இது தரிசிக்கத்தக்கது. இத்தலத்தில் உள்ள லிங்கோற்பவர் சிலை பச்சைக்கல்லினால் ஆனது.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய கோவில். நுழைவாயில் மேற்புறம் அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. நுழைவாயிலுக்கும் 3 நிலை இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது. உள்ளே கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் பார்த்து ரசிக்கத் தக்கது. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்ற போது வழியில் ஒரு சிவலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்ட அவருக்கு அந்த இடத்தில் பூஜைக்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், அவர் விசியெறிந்த கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் இறைவன் ஒருவருக்குத் தான் இவர் உணமையான பக்தியால் இவ்வாறு செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.
இத்தலம் இருந்த பகுதியில் சாக்கியர்கள், (பெளத்தர்கள்) அதிகமாக வாழ்ந்து வந்ததால் இவ்விடம் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டு பின் மருவி சாக்கோட்டை என்று பெயர் பெற்றது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை