சற்குணலிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் சாக்கோட்டைக்கு அடுத்து உள்ள இத்திருவூர் மருதாந்தநல்லூர் என்று வழங்கப்படுகிறது.
சுவாமி : கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர், சற்குணலிங்கேசுவரர்
அம்பிகை : கல்யாணநாயகி, சர்வாலங்காரநாயகி, அத்வைதநாயகி
தல விநாயகர்: வலம்புரி, விநாயகர்
தீர்த்தம் : இமய தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலம். சிறிய கோயில். சுவாமி, அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியுள்ளன. ஏனாதிநாத நாயனார் அவதரித்த ஏனநல்லூர் என்னும் எயினனூர் பக்கத்தில் உள்ளது. இங்கு பிரமபுரீசுவரர் திருக்கோயில் உள்ளது.
சற்குணன் என்னும் மன்னன் வழிபட்டு பேறு பெற்றதால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் எனப்படுகிறார். இக்கோயிலின் விமானங்கள் மிகப் பெரியன. சிவலிங்கத்திருமேனி சிறிய மூர்த்தி. மிகத் தாழ்வான ஆவுடையார். மண்ணாலானது. கல்லாலான பீடம்.
கோவில் அமைப்பு: சிறிய பழைமையான கோயில். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும். கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது அநுமத்லிங்கம். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், இருபுறம் பூதகணங்கள், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
வரலாறு: ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும் என்றும் கூறப்படுகிறது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் அனுமந்த லிங்கம் என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளது
தனஞ்சயன் என்ற வணிகன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது. எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் நிச்சயம்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை