பசுபதீஸ்வரர் கோவில், திருக்கொண்டீச்சரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் ரயில்நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது திருக்கண்டீஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. நன்னிலத்துக்குள் நுழைவதற்கு முன்னால் தூத்துக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் சென்றால் வெகுவாக கோயிலை அடையலாம்.
சுவாமி : பசுபதிநாதர், பசுபதீசுவரர்
அம்பிகை : சாந்த நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : க்ஷீர புஷ்கரணி
பதிகம் : திருநாவுக்கரசர் - 2
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் காமதேனு வழிபட்ட தலம். மேலும் உமா தேவியார் பசுவடி வாய் பால் சுரந்து பூசித்த தலம். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
பகவானால் காமதேனுவாக சாபம் பெற்ற உமாதேவி இத்தலத்தில் பூமியை கொம்பினால் கிளறிக்கொண்டே வந்தபோது இறைவனின் தலையில் கொம்பு பட்டு இரத்தம் வடிந்தது. பின் உமாதேவி ஈசனின் சிவலிங்கத் திருமேனியைப் பாலால் அபிஷேகம் செய்து காயத்தை ஆறச்செய்து சாப விமோசனம் பெற்றாள். இதன் காரணமாக இன்றும் லிங்கத்திருமேனியில் கோட்டின் வடு காணப்படுகிறது. சாந்தநாயகி சமேத பசுபதீஸ்வரர் சிவலிங்க மூர்த்தியாக எழுந்தருளி தம்மை அண்டிவருவோர்க்கு அருள் புரிந்து காக்கின்றார். மேலும் இக்கோயிலில் நமக்கு வரும் ஜுரத்தைப் போக்கும் ஜுரதேவர் கோயில் கொண்டுள்ளார். பிரகாரத்தில் விநாயகர், முருகர், கஜலட்சுமி, நவக்கிரகம், சூரியன், ஆபத்சகாய மகரிஷி முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள வௌவால் நெத்தி மண்டபத்தில் ஆப்தசகாய மகரிஷி உருவமும் ஒருபுறத்தில் மூன்று திருவடிகளுடன் ஜவரஹரேசன் உருவமும் உள்ளது.
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்ட திருக்கோயில். இந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேல் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் காணலாம். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபடவந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜுரதேவராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஜுரம் (காய்ச்சல்) நோயால் அவதியுறுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீர் அபிஷேகம் செய்து புழுங்கல் அரிசி நிவேதனம் செய்தால் ஜுரம் நீங்கும். கார்த்திகை வியாழன் எமகண்டத்தில் ஒவ்வொரு வருடமும் விழா எடுக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தல வரலாறு: ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள். அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : நன்னிலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை