கணபதீஸ்வரர் கோவில், திருசெங்காட்டங்குடி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் ரயில்நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் திருக்கண்ணபுரத்துக்குத் தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் திருவாரூர் - திருமருகல் சாலையில் சந்தைப்பேட்டை வழியாக 3 கி.மீ தொலைவு சென்று இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : உத்திராபதீசுவரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்
அம்பிகை : சூளிகாம்பாள், திருக்குழலம்மை
தலமரம் : ஆத்தி
தீர்த்தம் : சத்திய , சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு மற்றும் சீராள தீர்த்தங்கள்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 2
திருத்தலச் சிறப்புகள்: இறைவன் சிறுத்தொண்ட நாயனார்க்குப் பைரவர் திருக்கோலத்தில் வந்து பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
விநாயகர் பூசித்தமையால் கோயிலுக்குக் 'கணபதீச்சரம்' என்று பெயர் உண்டாயிற்று. விநாயகர் கயமுகாசூரனை கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனை கொன்ற போது அவனது இரத்தம் படிந்த இப்பகுதி செங்காடாக மாறி செங்காட்டங்குடி எனப்பட்டது என கூறப்படுகிறது.
தல வரலாறு: கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார். இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப் பெயர் பெற்றது.
கிழக்கு நோக்கியுள்ள 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோயில் வாயிலில் சத்திய தீர்த்தம் எனப்படும் திருக்குளம் உள்ளது. கோபுரத்தின் உட்புறம் தல விருட்சமான ஆத்தி மரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுது செய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் பிட்சாடனர், சிறுத்தொண்டர், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளதேவர், அவரது வீட்டு பணியாள் சந்தனநங்கை ஆகியோர் மூலத் திருமேனிகளையும், 63 மூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபி கணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனார், திரிபுராரி, பைரவர், விநாயகர் ஆகியோரின் அருமையான வேலைப்பாடுடைய மூலத் திருமேனிகள் இம் மண்டபத்தில் உள்ளன.
மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் உத்தராபசுபதீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காவியுடை அணிந்து, கையில் திருவோடு, திரிசூலம், உடுக்கை வைத்திருக்கிறார். சிவன் சிலையாக மாறியபோது நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் செதுக்கவே ரத்தம் பீறிட்டது. கலங்கிய சிற்பிகள் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைத்தவுடன் ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் இந்த காயத்துடன் உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையின்போது மட்டும் காயத்தில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கின்றனர். சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பன்றும், சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய நாட்களில் 2 முறையும் என மொத்தம் வருடத்திற்கு பத்து நாட்கள் மட்டும் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
வாதாபி விநாயகர்: விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்தவர் இத்தலத்திலுள்ள வாதாபி விநாயகர். பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி ஒருசமயம் வடநாட்டிற்கு போருக்குச் சென்றார். சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று, சாளுக்கிய நாட்டின் தலைநகரமான வாதாபி என்ற ஊரில் இருந்த கணபதி சிலையை, தன் வெற்றியின் அடையாளமாக தமிழகம் கொண்டு வந்தார். தன்னுடைய சொந்த ஊரான இத்தலத்தில் அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்தார். வாதாபியிலிருந்து வந்ததால் இந்த விநாயகர் வாதாபி விநாயகர் என்ற பெயர் பெற்றார். இந்த விநாயகர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருவது விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படும். பல்லவமன்னன் தளபதியான வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்த போது, உடன் கொண்டு வந்த விநாயகரை இங்கு தான் பிரதிஷ்டை செய்தார்.
சித்திரை பெளர்ணமியில் சிறுத்தொண்டர் 'திருவமுது படைத்தல்' என்னும் திருவிழா நடைபெறுகிறது. இச்சிறப்பு 'அமுதுபடையல்' என்று வழங்கப்படுகின்றது. மகப்பேறு இல்லாதவர்கள் இவ்விழாவில் கொடுக்கப்படும் பிரசாதத்தை உண்டு உத்திரபதியாரை வழிட்டால் அவர்கள் மகப்பேறு அடையப் பெறுவர். இப்பிரசாதம் அமுதுபடையல் விழாவன்று மட்டுமே கிடைக்கும். பைரவக் கோலத்தில் உத்திராபதியார் சிலையும் உள்ளது. தெற்கு வீதியில் சிறுத்தொண்டர் மடமும் உள்ளது. இத்திருத்தலம் ஊரின் நடுவே கிழக்கு நோக்கியுள்ளது. இத்தலத்திற்கு மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், அத்திவனம், பாஸ்கரபுரீசம் என்னும் வேறு பெயர்களும் உள்ளன. கோயிலை அடுத்து சிறுத் தொண்டர் வாழ்ந்த மாளிகை இன்று கோயிலாக உள்ளது.
தினந்தோறும் காலை 6.30 முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : நன்னிலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை