காயாரோகனேசுவரர் கோவில், நாகைக் காரோணம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. நாகை என்பது நாகப்பட்டினம். இது ஊர்ப் பெயர். காரோணம் என்பது கோயில் பெயர்.
சுவாமி : காயாரோகணேசர், ஆதிபுராணர்
அம்பிகை : நீலாயதாட்சி
தலமரம் : மாமரம்
தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம், தேவ தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 4, திருஞானசம்பந்தர் - 2, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. இங்குள்ள தியாகராஜர் சுந்தரவிடங்கர். நடனம் பாரவார தரங்க நடனம். இதை வீசிநடனம் என்னும் கூறுவர். அதாவது அலையானது சுழன்று வருவது போன்ற பாவனையில் ஆடும் நடனம். இறைவன் புண்டரீக முனிவரைத் திருமேனியில் ஆரோகணித்த சிறப்புடையது. 'அதிபத்த நாயனார்' அவதாரத் தலம். தசரதன் சனிப்பிரதிஷ்டை செய்து வழிபட்ட பதி. மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கும் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒருமுறை ஒரே ஒரு தஙக மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும். இத்தலம் நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு சனி பகவான், தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விவரிக்கிறது. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனிபகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான இத்தலம் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலும், அதையடுத்து ஒரு 3 நிலை கோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் கூடிய மிகப் பெரிய ஆலயமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அம்பாள் நீலாயதாட்சி அருளாட்சி செய்கிறாள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்ற வரிசையில் இத்தலத்து அம்பிகை நாகை நீலாயதாட்சி என்று வழங்கப் பெறுகிறாள்.
இறைவன் அளித்த அதே உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்த புண்டரீக முனிவரின் பக்தியில் உள்ளம் உருகி முனிவரை அதே உடலோடு ஆரோகணம் செய்து முக்தி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் காயாரோகனேசுவரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது.
அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும். மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது.
நாகாபரண பிள்ளையார் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்; பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே. திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார். இத்தலத்திலுள்ள சனி பகவான் தசரத சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தலம் சனி பகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு சனி பகவான் தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விவரிக்கிறது. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தீர்த்தங்களாக கோவிலுக்கு மேற்கில் புண்டரீக தீர்த்தமும், முத்தி மண்டபம் அருகில் தேவ தீர்த்தமும் உள்ளன. தனி சந்நிதியில் ஒரே கல்லினால் ஆன ஆறுமுகப் பெருமான் 12 கரங்களுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் காட்சி தருகின்றனர்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : நாகப்பட்டினம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு