கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூருக்கு கிழக்கே நாகப்பட்டினம் சாலையில் 12 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது 'கீவளூர்' என்று வழங்கப்படுகிறது. கீவளூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். 'இலந்தைவனம்' என்பது இத்தலத்தின் மற்றொரு பெயர்.
சுவாமி : அட்சயலிங்கேசுவரர், கேடிலியப்பர்
அம்பிகை : சுந்தரகுஜாம்பாள், வனமுலை நாயகி
தலமரம் : இலந்தை
தீர்த்தம் : சரவண தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் -1, திருஞானசம்பந்தர் -1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் அகத்தியர், மார்க்கண்டேயர், ஆதிசேடன், வசிட்டர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். அகத்தியர் நடராஜரின் வலத்திருவடியை தரிசித்த பதி. இத்தலத்து விநாயகர் 'பத்ரி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
தலவரலாறு: முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து "வட பத்ரிகாரண்யம்" ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி "தென் பத்ரிகாரண்யம்" ஆயிற்று. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது.
ஸ்ரீ முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், "பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்"' என்று கூறி அருளினார்.
அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே ஸ்ரீ அஞ்சு வட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு. குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு: சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோயில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.
கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். அடுத்து சோமஸ்கந்தர் திருச்சந்நிதி. தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கின்றது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (ஸ்ரீ சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கீழ்வேளூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை