வான்மீகிநாதர் கோவில், திருவாரூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : தியாகராசர், ஆரூரான், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
அம்பிகை : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம் செங்கழுநீர் ஓடை
பதிகம் : திருநாவுக்கரசர் - 21, திருஞானசம்பந்தர் - 5, சுந்தரர் - 8
திருத்தலச் சிறப்புகள்: இதற்குக் கமலாயபுரம், க்ஷேத்திரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், கந்தபுரம் முசுகுந்தபுரம், கலிசெலாநகரம், அந்தரமகேசபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், சக்திபுரம் எனவும் சேர்த்து 14 பெயர்கள் உள்ளன. தென்னிந்தியாவில் உள்ள பெரிய கோயில்களுள் இது ஒன்றாகும்.
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவனை தமது மார்பில் வைத்து பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவரது மார்பின் ஏற்ற, இறக்கங்களில் இறைவன் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாக பெற்று பூசித்தார். அதன்பின் முசுகுந்த சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது. இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராஜ மூர்த்தங்களுமே 'சப்த விடங்கத் தலங்கள்' எனப்படுகின்றது. இத்தலத்தின் சாயரட்சை வழிபாட்டின் போது இந்திரனே வந்து பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசக்தி தவம் செய்த தலம்.
இத்திருத்தலத்தில் நமி நந்தியடிகள் லட்ச தீபத்தைத் திருக்கோயில் குளத்து நீரால் எரியச் செய்தார். இறைவன் சுந்தரருக்காகப் பரவையார் மனைக்குத் தூது சென்ற தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். பாம்புப்புற்றை தான் எழுந்தருளியிருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுக்கொண்ட வன்மீகிநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம். "கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி" என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம் இத்தலம் ஆகும். முசுகுந்த சக்ரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாக விளங்கிய திருத்தலம் இத்தலம் ஆகும். சப்தவிடங்கத்தலங்களில் (வீதி விடங்கர்-அஜபா நடனம்) மூலாதாரத்தலம். பஞ்சபூதத்தலங்களில் பூமி (பிருத்வி) தலம்.
திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தர் நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை, இத்திருத்தலத்தில் உள்ள கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம். சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக, இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம். சுந்தரர் தன் மனைவி சங்கிலி நாச்சியாரைப் பிரியமாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி, திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின் திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.
கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப்பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இத்தலம் என்ற தனிச்சிறப்பை பெற்றுள்ளது வீறன்மிண்ட நாயனார், நமிநந்திஅடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தி பெற்ற திருத்தலம்.
இத்தலத்தின் உயர்ந்த ராஜகோபுரம் அழகாக காட்சியளிக்கிறது. ஏழு கோபுரங்களுடனும், நான்கு பக்கங்களிலும் சுற்றுச்சுவரால் சூழப்பட்டு, ஐந்து பிரகாரங்களுடன் காட்சி அளிக்கின்றது. கீழக் கோபுரம் 118 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. இதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு.
பிற்கால சோழ மன்னர்களில் ஒருவரான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பம்சம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணப்படும் ஒரு சிறப்பம்சம்.
சுவாமியும், அம்பாளும் தனித் தனியே சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். இறைவி அல்லியங்கோதை நான்கு திருக்கரங்கள் கொண்டு, இடக்கரம் தோழி இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையை தொட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பு காணவேண்டிய ஒன்றாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகர், வள்ளி, தெய்வயானை, கலைமகள், வன்மீகநாதர் முதலிய சந்நிதிகள் உள்ளன. திருவாரூர் தேர் உலக பிரசித்தம். திருவாரூர் தேர் 'அழகு' என்ற சிறப்பு பெற்றது. இதற்கு 'ஆழித்தேர்' என்று பெயர். சுவாமி புஷ்கரணியான கமலாலயம் ஊருக்குப் பெருமை சேர்க்கிறது. மனுநீதி மன்னன் புகழ்பாடும் பெருமை இந்தத் தென்னக மண்ணுக்குண்டு. தஞ்சை சரபோஜி மன்னன் கும்பாபிஷேகம் நடத்திய பெருமை இன்றும் பேசப்படுகிறது. திருவாரூர் சித்தர்களின் கோட்டம். திருவாரூரில் வாழ்ந்த சித்தர் பலருள் ஸ்ரீகுருதக்ஷிணாமூர்த்தி சித்தரும் ஒருவர்.
வன்மீகநாதர் மற்றும் தியாகராஜர் சந்நிதிகள்: வன்மீகநாதர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம் எனப்படும். சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில் வடபால் அதிகார நந்தி காட்சி. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர், சோழமன்னன், மாணிக்கவாசகர், திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இசந்நிதிக்கு வலதுபுறம் இத்தலத்தின் பிரதான மூர்த்தியான தியாகராஜர் சந்நிதி உள்ளது. தியாகராசாவின் பக்கத்திலுள்ள அம்மை "கொண்டி" எனப்படுபவள். சந்நிதியில் வலதுபுறம் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத் தான் காலை மாலை வேளைகளில் அபிஷேகம். தியாகராசாவின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப் பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது.
கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும்,பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்லவேண்டும்.ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள் பெறலாம்.
நிலோத்பலாம்பாள் சந்நிதி: இங்கே அம்பாள் இரண்டு கரத்துடன் ஆதிசக்தியாக காட்சி தருகிறார். அல்லியங்கோதை என்று தமிழிலும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் பெயர். வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புடன் அம்பாள் காணப்படுகிறார். அம்பாளுக்கு இடது புறமாக ஒரு பெண் நின்ற நிலையில் ஒரு சிறுவனை தன் தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு காட்சி அளிக்கிறாள். அவன் தலை மீது அம்பாள் தன் இடது கையை படிமானமாக வைத்துக் கொண்டிருப்பது போல, ஒரே கல்லில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஒரு குவளை மலரை வைத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வாறான திருவுருவம் வேறுஎங்கும் காண இயலாதது, கருவறையில் பள்ளியறையும் அமைந்து தனித்தன்மை பெற்று விளங்குகிறது
ரௌத்திர துர்க்கை சந்நிதி: அருள்மிகு ரௌத்திர துர்க்கை அம்பாள் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் நெடுநாட்களாக திருமணத்தடையை நிவர்த்திசெய்யவே ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்வோருக்கு குறைதீர்த்து அருள்பாலிக்கின்றாள். ரௌத்திர துர்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் அhச்சனை செய்து விஷேச பலனை அடையலாம்.
ரண விமோசனர் சந்நிதி: ரண் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கடன் என்று பொருளும் ரண என்ற தமிழ் சொல்லுக்கு காயம் என்ற பொருளும் உண்டு. நெடுநாள் தீராத, வராத கடனையும், தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் ரண விமோசனர் என அழைக்கப்படுகின்றாh.; இவரை அமாவாசை தினத்தன்று அபிஷேகம், உப்பு மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுதல் மிகவும் பலனைக் கொடுக்கும். பக்தர்களின் உப்பு காணிக்கையினால் பிரகாரம் சற்று அரித்து இருந்தாலும் லிங்கம் எந்தவித பாதிப்பும் இன்றி ரண விமோசனர் விளங்குகின்றார்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருவாரூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு