தூவாய் நாயனார் கோவில், ஆரூர் பறவயுன்மண்டளி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூர் ரயில் நிலையத்தின் அருகே உள்ளது. திருவாரூரிலிருந்து கிழக்கு ரத வீதியில் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : தூவாய்நாதர்.
அம்பிகை : மெல்லடியம்மை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம், செங்கழுநீர் ஓடை
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருக்கோவில் திருவாரூர்ப் பெரிய திருக்கோவிலின் பெருந்தேர் நிலைக்கு அருகில் தென்மேற்கில் அமைந்துள்ளது. இது 'தூவாய் நாயனார் கோயில்' என்று சொல்லப்படுகிறது. முன் ஒரு காலத்தில் வருணன் இந் நகர்மீது கடலை ஏவிவிட்டான். அதனால் இத்திருக்கோவில் கடலை உண்டு நிலைபெற்ற காரணத்தால் பரவையுண் மண்டளி என்னும் திருப்பெயர் உண்டாயிற்று. பரவை - கடல். துருவாச மாமுனிவர் வழிபட்ட திருவூர். இறைவன் சிலை பளிங்கு போல் பளபளப்புடன் நிகழ்கின்றது. துருவாசருடைய சிலை பிள்ளையாருக்குப் பக்கத்தில் இருக்கின்றது. திருக்கோவிலுக்குள் ஒரு சிறிய திருக்குளம் இருக்கின்றது. இதில் இறைவன் திருவருளால் சுந்தரர் மூழ்கிக் கண் பெற்றார் என கூறப்படுகிறது.
திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் தேர் நிலைக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியை உடைய இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனின் பெயர் தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் துர்வாசர் கோவில் என்று தான் அழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.
தலப் பெருமை: சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் திருமணம் செய்த சுந்தரர், நாட்கள் செல்ல, திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும் என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும்.
தல வரலாறு: பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம் இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து தன்னை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும் என்றார். அதன்படி துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து இறைவனை பூஜைசெய்தனர். முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன் பொங்கிவந்த கடலை அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார். கோயிலின் அக்னி மூலையில் அமைந்துள்ள இக்குளம் தனி சிறப்புடையது. துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு துர்வாச நாயினார் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் துர்வாசருக்கும் ஒரு உருவச்சிலை உள்ளது. ஒரு காலத்தில் இவர் மிகவும் உக்கிரகமாக இருந்ததால் ஆலயத்திறகு வருபவர்கள் துர்வாசர் உருவச்சிலை இருக்கும் விநாயகர் சந்நிதியை தவிர்த்து கோவில் வலம் வந்தனர். இந்த உக்கிரகத்தைக் குறைக்க துர்வாசர் சிலையிலுள்ள வலது கை கட்டைவிரலை பின்னப்படுத்தியதாகவும், அதன்பின் மக்கள் பயமின்றி ஆலயத்தை வலம் வருகின்றனர். இங்கு 'தேவாசிரியம்' என்ற ஆயிரக்கால் மண்டபம் உள்ளது இது ராஜதானி மண்டபம் என்று வழங்கப்படுகிறது. எண்ணெய்க் காப்பு மண்டபத்தின் அருகில இந்திர லிங்கம் உள்ளது.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருவாரூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு