பதஞ்சலி மனோகரர் கோவில், திருவிளமர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் ரயில் நிலையத்திற்கு தென்மேற்கே 3 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள இத்திருவூர் தற்போது விளமல் என்று வழங்கப்படுகிறது. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது
சுவாமி : பதஞ்சலிமனோகரர்
அம்பிகை : மதுரபாஷிணி, யாழினும் மென்மொழியம்மை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். ஈசனின் நடனத்தை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜ பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். அதுமட்டுமின்றி இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிபதற்காக பாம்பின் கால்களை வேண்டி வரமாகப் பெற்றவர். இவர் மதுரமான குரலினிமை பெற யாழினும் மென்மொழியாள் என்ற இறைவியையும், பதஞ்சலிமனோகரர் என்ற சிவலிங்கத்தையும் ஏற்படுத்தி பூசித்த தலம்.
ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். கோயில் ஓடம் போக்கி ஆற்றின் கரையில் உள்ளது. சிறிய கோயில். கோயில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவர் திருவுருவம் உள்ளது. வியாக்கிரபாத முனிவர் (புலிகால் முனிவர்) சூரியன் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். இங்கு மகாவிஷ்ணு, துர்க்கை, விநாயகர், முருகர், பைரவர், சூரியன், சந்திரன், கஜலட்சுமி, சனீசுவரர், பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பைரவருக்கு இங்கு தனிசந்நிதி இருப்பது சிறப்பம்சமாகும். பைரவரை தேய்பிறை அஷ்டமி நாட்களில் வழிபடுவது விஷேசமாகும். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.
கோயில் எதிரில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம்.கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம். பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது. விநாயகரின் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொழில் சிறக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. சக்தி பீடங்களில் இத்தலம் வித்யாபீடமாக இருப்பதால் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இங்குள்ள அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் இறைவி மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். மேலும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து, விளம்பல் பதஞ்சலி, மனோகரரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
தினந்தோறும் காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருவாரூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை