ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திற்குத் தென்மேற்கே திருவாரூர் - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. எண்கண்ணிலிருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. கொரடாச்சேரி ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : நடனேசுவரர், ஆடவல்லநாதர்
அம்பிகை : உமா தேவி, திருமடந்தையம்மை
தலமரம் : ஆலமரம்
தீர்த்தம் : சங்கு தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் தாருகவனத்து முனிவர்கள் ஏவிய முயலகன் மீது இறைவன் நடனம்புரிந்து முதுகை ஒடியுமாறு செய்த தலம். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
கோயில் தெற்கு நோக்கியது. கபில முனிவர் வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் பிணி தீர்க்கும் சிறப்புடையது. கோயிலின் முன்புள்ள தீர்த்தத்தில் நீராடி தீபமிட்டு இறைவனை வழிபட்டால் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெறும். பிரகாரத்தில் விநாயகர், முருகர், விசுவநாதர், பைரவர், நால்வர் சந்நிதிகள் உள்ளன. எண்கண், குடவாசல், பெருவேளூர் முதலிய தலங்கள் அருகாமையில் உள்ளவை.
உயர்ந்த ராஜகோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின் திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் ஸ்ரீபாலாம்பிகை கருணை புரிகிறாள். திரு மடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சந்நிதியும் இங்குண்டு. சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி சந்நிதியைச் சென்றடைகிறது. செங்கற்களால் ஆன ஸ்வாமி சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாய் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். தனியே ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும் இங்கே உள்ளது. ஸ்வாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை உள்ளது. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்க தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார். பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் ஸ்வாமி மீது விழுகின்றன.
இத்தல தீர்த்தக் குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட, சகல வியாதிகளும் தீரும். வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களும் மறைவது கண்கூடு. முன்னோர்களது சாபங்கள் அகலும். இத்தல ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட, தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். பிள்ளைப் பேறு கிட்டும். இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமாகும்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கொரடாச்சேரி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை